உள்ளூர் செய்திகள்

பசுவே கண் கண்ட தெய்வம்

பிருகு முனிவரின் மகன் சியவனர். பெரும் தவசீலர். 12 ஆண்டுகள் ஒரு பெரிய குளத்துக்குள் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்தார். நீருக்குள் வாசம் செய்யும் ஜீவராசிகள் எல்லாம் அவரைத் தெய்வமாகப் போற்றின.ஒருநாள் மீனவர்கள் சிலர் சியவனர் தியான நிலையில் இருந்த குளத்தில் வலை வீசினர். அதில் சியவனர் அகப்பட்டுக் கொண்டார். ஏதோ பெரிய மீன் சிக்கி விட்டதாக எண்ணிய மீனவர்கள் வலையை சிரமத்துடன் இழுத்தனர். நீண்ட காலமாக சியவனர் நீருக்குள்ளேயே இருந்ததால், அவர் உடல் பாசிபடர்ந்து இருந்தது. மீனவர்கள் அவரைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டனர். அப்போது வலையில் சிக்கிய மீன்கள் இறந்ததைக் கண்டு சியவனர் வருந்தினார்.தன்னுடன் அன்போடு பழகிய மீன்கள் துடிப்பதைக் கண்டு தானும் உயிர்விடப் போவதாகக் கூறினார். பதறிய மீனவர்கள், “தபஸ்வி இறந்தால் பாவம் சேருமே” எனக் கலங்கி மன்னரிடம் முறையிட்டனர். குளக்கரைக்கு வந்த மன்னர் முனிவரை வணங்கினார்.“மன்னா! குளத்திலிருந்து பிடிக்கப்பட்ட மீன்கள், இந்த மீனவர்களுக்கு சொந்தமானது என்றால் நானும் அவர்களுக்கே சொந்தம். இருப்பினும் இந்த மீன்களை நீ விலைக்கு வாங்கி விட்டால் நான் உனக்கு சொந்தமாகி விடுவேன். என்னையும் வாங்கிக் கொள்” என்றார் சியவனர்.மன்னரும் மறுக்காமல் அப்படியே செய்வதாகச் சொல்லி, அவருக்கு மட்டும் விலையாக ஓராயிரம் பொற்காசுகள் மீனவர்களுக்கு கொடுத்தார்.“மன்னா! என் விலை ஓராயிரம் பொற்காசு தானா” என வருத்தப்பட்டார் முனிவர். ஒரு லட்சம் பொற்காசுகளை கொடுத்தார் மன்னர்.அப்போதும், “ம்....இவ்வளவு தானா என் மதிப்பு” என்றார் முனிவர்.“ஒரு கோடி பொற்காசு கொடுக்கட்டுமா” என மன்னர் முனிவரிடம் கேட்க அதற்கும் சம்மதிக்கவில்லை.மன்னனுக்கு மிக வருத்தம். என்ன செய்வதென அறியாமல் நின்ற வேளையில் அந்த வழியாக வந்த மற்றொரு முனிவர், “மன்னா! இதற்கு தீர்வு காண்பது மிக சுலபம். பொன், பொருளை மட்டுமல்ல... உன் நாட்டையே விட்டுக் கொடுத்தாலும் ஒரு முனிவருக்கு ஈடாகாது. மந்திரங்களின் வடிவம் பசு. அது அந்தணருக்கு சமமானது. இந்த முனிவருக்கு விலையாக ஒரு பசுவைக் கொடு” என்றார். மன்னரும் அவ்வாறே செய்ய, “மன்னா! இப்போது தான் சரியான விலையை நிர்ணயம் செய்தாய்” என்றார் சியவனர்.கண் கண்ட தெய்வமான பசுவின் பெருமையை உணரக் காரணமான மீனவர்களுக்கு பொற்காசுகளை வாரி வழங்கினார் மன்னர்.