உள்ளூர் செய்திகள்

தேடி வந்த தெய்வம்

திருச்சி அருகிலுள்ள ஆங்கரையைச் சேர்ந்தவர் சங்கீத வித்வான் சாத்துார் ஏ.ஜி.சுப்பிரமணியம். காஞ்சி மஹாபெரியவரின் பக்தையான இவரது தாயார் 'கோடி ராம நாம ஜப யக்ஞம்' நடத்தினார். வீட்டில் நடந்த ஜபத்தில் பலரும் கலந்து கொண்டனர். ஒருநாள் அங்கு வந்த பெண் ஒருவரின் கண்கள் கலங்கி இருந்ததைக் கண்டு, ''ஏன் அழறே'' எனக் கேட்ட போது,'' என் வீட்டில் நவராத்திரி கொலுவில் அடுக்கிய பொம்மைகளை பரணில் எடுத்து வைத்தேன். அதில் மஹாபெரியவரின் பொம்மை ஒன்றும் இருந்தது. சாயம் போய் பழசாகிப் போன அதை பெட்டிக்குள் எடுத்து வைக்காமல் ஓரமாக வைத்தேன். தினமும் நாம ஜபம் செய்த பின் இரவில் அதனருகில் செல்லும் போது, '' என்னை சாத்துார் அம்மாளிடம் சேர்த்து விடு'' என யாரோ சொல்வது போல் கேட்கிறது. பழைய பொம்மையை எப்படி கொடுப்பது என தயக்கமாக உள்ளது'' என்றாள். ''அசட்டுப் பெண்ணே! மஹாபெரியவர் இங்கு வர விரும்பினால் அது நான் செய்த புண்ணியமாச்சே! இப்போதே போய் நாம் எடுத்து வரலாம்'' என்றார் தாயார். அப்படியே செய்ய அதன்பின் நாம ஜபம் சிறப்பாக நிறைவேறியது.இதற்கு பின்பு, சாத்துார் அம்மாளின் பேரன் வாழ்விலும் இனிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ராம பக்தரான அவர் குடும்பத்துடன் ஓமன் நாட்டில் வாழ்ந்தார். ஒருமுறை தன் வீட்டில் ராமநாம ஜபம் நடத்த இருந்த சமயத்தில் ராமன் என்னும் நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, '' எங்கள் வீட்டிலுள்ள பட்டாபிேஷக ராமர் படத்தை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யுங்கள்'' என்றார். பேரனும் ஆர்வமுடன் அதை வாங்கி வந்தார். அதில் இருந்த கவர் ஒன்றில், காஞ்சி காமகோடி பீடத்தின் 59 வது பீடாதிபதியான போதேந்திரரின் உருவம் பொறித்த டாலர் இருந்தது. இவர் தான் ராமநாம மகிமையை நாடெங்கும் பரப்பியவர். அந்தக் காலத்தில் தன் பாட்டிக்கு கொலு பொம்மை வடிவில் வந்த குருநாதர், தற்போது டாலர் வடிவில் தன்னை தேடி வந்ததை எண்ணி பரவசப்பட்டார். ------------காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.-------உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.