உள்ளூர் செய்திகள்

பேசும் தெய்வம்! (12)

கோசல நாட்டில் சுசீலர் என்ற பணக்கார வியாபாரி இருந்தார். அவரது மனதில் மருந்துக்கும் பக்தி கிடையாது. அது கூடப் பரவாயில்லை. கடவுளையும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் இகழ்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், பிறருக்கு கொடுத்து மகிழும் நல்ல குணம் சுசீலருக்கு இருந்தது. காலம் மாறும் அல்லவா... வியாபாரம் நலியத் தொடங்கியது; செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது.சுசீலரின் மனைவி மீனா நோயில் படுத்தாள். மருத்துவம் பார்த்தும் பலனில்லை. ஒருநாள்...இரவு நேரம்! பத்து வயது மகன் மணிவண்ணனும், பன்னிரண்டு வயது மகள் ரமணியும் துாங்கிக் கொண்டிருந்தனர். திடீரென, ''அம்மா!' என அலறினான் மணிவண்ணன்.உடனே எழுந்த சுசீலர்,'' ரமணி... தம்பி துாக்கத்தில் அலறுகிறான். நான் பார்த்துக் கொள்கிறேன். அடுக்களைக்கு போய் பால் சொம்பை எடுத்து வந்து அம்மா வாயில், கொஞ்சம் ஊற்றுகிறாயா?' என்றார்.சொம்புடன் தாயை நெருங்கிய ரமணி, அலறினாள். ''அப்பா... அம்மாவை வந்து பாரு!' என்றாள்.ஓடி வந்தார் சுசீலர். 'வாழ்ந்தது போதும்' என மூச்சை நிறுத்தியிருந்தாள் மனைவி. செய்ய வேண்டிய இறுதிக்கடனை சுசீலர் செய்தார். துயரம் வாழ்வில் தொடர்கதையானது. ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தான் கிடைத்தது.மகன் மணிவண்ணன் பதினைந்து வயதை அடைந்தான். தினமும் பள்ளிக்கூடத்திற்கு போவதும், வருவதுமாக இருந்தானே தவிர, குடும்பத்தின் நிலைமை அவனுக்கு புரியவில்லை. அதே சமயம் சுசீலரும் முடிந்த அளவுக்கு வறுமை தீண்டாத விதத்தில் பிள்ளைகளை வளர்த்தார்.ஒருநாள் வெளியில் கிளம்பி நின்ற சுசீலரை மகன் வழிமறித்தான். விருப்பமான தின்பண்டம் வாங்கித் தர வேண்டுமென அடம் பிடித்தான். கோபத்தின் உச்சிக்கு சென்ற சுசீலர், 'பளார்' என கன்னத்தில் அறை விட்டார்.''மூஞ்சியப் பாரு... அரிசிக்கே வழியில்லே. திங்கறத்துக்கு தீனி கேக்கறதாம்'' என்று ஆவேசமாக கத்தினார்.பிறந்ததில் இருந்து அடி வாங்காத மணிவண்ணன் நடுங்கினான். தந்தையின் கண் முன் நிற்க விரும்பாமல் வாசலுக்கு ஓடினான். சுசீலர், ''சே.....என்ன இது? குழந்தையை அடித்து விட்டேனே! குடும்பத்தின் வறுமையை அவன் அறிவானா? எவ்வளவு பெரும் பாவத்தை செய்து விட்டேன்''என்று கத்தியபடி வாசல் பக்கம் வந்தார். .அப்போது, தெருவில் சென்ற வேதியர் ஒருவருக்கு சுசீலரின் முகம் பரிச்சயமானதாக இருந்தது. அருகில் வந்து, ''ஐயா! நீங்கள் சுசீலர் தானே?' என்றார்.ஆம்... நான் சுசீலன் தான். ஆனால் இப்போது சீலம் (ஒழுக்கம்) தான் போய் விட்டது! தின்பண்டம் கேட்ட பிள்ளைக்கு வாங்கி தர முடியாத பாவியாகி விட்டேன். ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லை'' என்று சொல்லி வருந்தினார். ''சுசீலரே! உங்களை நன்றாக நான் அறிவேன். புண்ணிய வசத்தால் தங்களிடம் உள்ள பொருளை மற்றவருக்கு கொடுப்பதை பார்த்திருக்கிறனே. ஆனால், தெய்வத்தை இகழ்ந்தபடி விவாதம் செய்வீர்கள். 'இல்லாதவனுக்கு கொடுக்கும் நிலையில் இருப்பவனே தெய்வம்' என்பது போல செயல்படுவீர்கள். உங்களிடம் உதவி பெறுபவர்களும், வேறு வழியின்றி தான் வந்தனர். அவர்கள் நினைத்தால், தாங்கள் செய்யும் விவாதங்களை மறுத்து பேசியிருக்க முடியும். சரி தான்... போனால் போகட்டும் என்றிருந்து விட்டனர். சரி... இனியாவது கடவுளை சரணடையுங்கள். சோதனை சிலகாலம் வேண்டுமானால் நீடிக்கலாம். நிச்சயம் நல்லவழி பிறக்கும்'' என்றார்.வருந்திய சுசீலர் மனம் திருந்தினார். ''சுவாமி! என்னை மன்னியுங்கள்! ஏதோ நான் செய்த புண்ணியம்! தெய்வம் போல் இங்கு வந்தீர்கள்! குறை தீரும் வழியை தாங்களே சொல்ல வேண்டும்'' என வேண்டினார். ''சுசீலரே! கவலை வேண்டாம். ஆரம்பமான எதற்கும் ஒரு முடிவு உண்டு. உங்களை வாட்டும் வறுமையும், மனக்கவலையும் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி விட்டது. பார்வதியை ஒன்பது இரவுகள் ஆராதனை செய்யுங்கள். நல்ல தீர்வு கிடைக்கும்'' என்றார் வேதியர்.பிரதமை திதியும், அஸ்த நட்சத்திரமும் கூடிய நல்ல நாளில் பராசக்தியை வழிபட்டு விரதமிருக்க தொடங்கினார் சுசீலர். எட்டுநாள் முடிந்து, ஒன்பதாவது நாள் காலையில் நீராடி விட்டு வழிபாட்டுக்கான ஏற்பாட்டை தொடங்கினார் சுசீலர். அப்போது வாசலில் ஒருவர், ''சுசீலர் என்பவர் இங்கேயா இருக்கிறார்?'' என்று குரல் கொடுத்தார். ''ஆமாம்...நான் தான் சுசீலர். நீங்கள் யார்?'' என்று வாசலை நோக்கி விரைந்தார் சுசீலர். வீட்டுக்குள் வந்தவர் திடுக்கிட்டார். ''ஆ...ஆ...உருவம் மாறி, நிறம் மாறி விட்டீர்களே... என்ன சோதனையிது! என்னை தங்களுக்கு தெரியவில்லையா? தங்களிடம் ஆறாயிரம் பொன் பெற்று வியாபாரம் தொடங்கினேன். இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டேன். உங்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். ஆறுமாத காலமாக தேடி அலைந்தும் தாங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போதே பெற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு சேர வேண்டிய பொற்காசுகளை லாபத்துடன்'' என்று தன்னிடமிருந்த பணமுடிப்பை கொடுத்தார்.பராசக்தியின் அருளை நினைத்து வியந்த சுசீலர் மீண்டும் வியாபாரம் செய்ய துவங்கினார். மீண்டும் செல்வந்தர் ஆனார். பிறருக்கு கொடுத்து மகிழும் இயல்பு அப்போதும் தொடர்ந்தது. ஆனால், கடவுள் பக்தி வெளிப்பட்டதே தவிர, தெய்வ நிந்தனை சிறிதுமில்லை. ''என்னை திருத்தி அம்பிகை நல்வழி காட்டினாள். அவளின் கையிலுள்ள கருவிகளே நாம்'' என்று பராசக்தியின் பெருமையை வாயார புகழ்ந்தார். மகள், மகனுக்கு பெரிய குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தார். ஆணவத்தால் தன்னை மறுப்பவருக்கும் தெய்வம் தற்காலிகமாக தண்டனை தரும்; ஆனால் ஒருபோதும் கைவிடுவதில்லை. தொடரும்அலைபேசி: 97109 09069- பி.என். பரசுராமன்