உள்ளூர் செய்திகள்

பேசும் தெய்வம் (9)

விலை உயர்ந்த பட்டுப்புடவை உடுத்தி கல்யாணத்திற்குப் போனாள் ஒரு பெண். கூடவே பக்கத்து வீட்டுக்காரியும் போனாள். போனவள், ''அங்க ஒக்காராத! இங்க ஒக்காராத!'' என்றதுடன், சாப்பிட்டு கை கழுவும்போது கூட, ''பாத்து! பட்டுப்புடவை அழுக்காயிடப் போகுது' என்றாள்.'அந்தம்மா மேல இவ்வளவு கரிசனமா உனக்கு?' என்றதற்கு, ''அவங்க மேல இல்லீங்க! அவங்க கட்டியிருக்க பட்டுப் பொடவ மேல! ஏன்னா நான் இரவலா குடுத்திருக்கேன். அது அழுக்காப் போனா, எனக்குத் தான நஷ்டம்!' என்றாள். ஒரு புடவையை கொடுத்தவ இவ்வளவு செய்யும் போது, தன் அடியார்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்ததெய்வம் என்ன வெல்லாம் செய்யும்... பார்க்கலாம் வாருங்கள்!திருச்சிக்கு அருகிலுள்ள கீழாலத்துார் சிவசிதம்பரம் பிள்ளை திருவண்ணாமலைக்கு யாத்திரை சென்றார். மனைவி மீனாம்பிகையும் உடனிருந்தாள். 'அண்ணாமலையானே! மகப்பேறு வேண்டி வந்திருக்கிறோம். மனம் கனிந்து அருளய்யா!' என வழிபட்டு அங்கேயே தங்கினார். ஒருநாள் அண்ணாமலையார் கனவில் தோன்றி, ''உம் குறையை யாம் போக்குவோம். இப்போதே ஊருக்கு திரும்பு'' என உத்தரவிட்டார். ஊர் திரும்பிய பத்தாம் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 'அருணாசலம்' எனப் பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை ஐந்து வயது வரை பேச வில்லை.பெற்றோர், ''அண்ணாமலையானே.. குழந்தை தந்த நீ, குரலைத் தர மறந்தாயே'' என்று முறையிட்டனர். மனம் பொறுக்காத அண்ணாமலையார் துறவி வடிவில் வீட்டுக்கே வந்தார். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற சிவசிதம்பரம், தன் மனக்குறையை துறவியிடம் கொட்டினார். ''அப்படியா? குழந்தையை பார்க்கலாம்'' என்றார் துறவி. அருணாசலம் ஆசனமிட்டு, கண் மூடியபடி தியானத்தில் இருந்தான். சிவசிதம்பரத்திடம்,' நீ உன் பிள்ளையிடம் இப்போது பேசு!' என்றார் துறவி. ஆனால் அதற்கு முன்பே ''சும்மாயிருக்கிறேன்''என அருணாசலம் பதில் அளித்தான். துறவியோ, 'சும்மாயிருக்கின்ற நீ யார்?' எனக் கேட்டார்.கண் திறக்காமல் அருணாசலம், 'நீயே நான்! நானே நீ!' என்றான். ''சத்தியம்''எனச் சொல்லி விட்டு துறவி அங்கிருந்து மறைந்தார்.அதிசயம் நிகழச் செய்த அண்ணாமலையாரை எண்ணி பெற்றோர் மகிழ்ந்தனர். அந்த தெய்வக்குழந்தை நிகழ்த்திய அற்புதம் ஏராளம். அதில் ஒன்றை மட்டும் பார்க்கலாம். காலசக்கரம் சுழன்றது. அருணாசலத்தின் புகழ் எங்கும் பரவியது. ''மகாஞானி, சித்தர், யோகி,சுவாமிகள்''என மக்கள் போற்றினர். நாம் அவரை. 'சுவாமிகள்' என்றே குறிப்பிடலாம். சோமநாதர் எனும் செல்வந்தர், வயிற்று வலி நோயால் துன்பப்பட்டார். மருத்துவம் பார்த்தும் பயனில்லாமல் போகவே, சிதம்பரம் நடராஜரை தரிசித்து நோய் தீர வேண்டினார்.அப்போது ''திருவாரூரில் உள்ள தட்சிணாமூர்த்தியிடம் செல்; உன் நோய் நீங்கும்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி, சோமநாதர் திருவாரூரை அடைந்தார். அங்கு தட்சிணாமூர்த்தி சன்னதியில் மனமுருக வழிபட்டார். நோய் நீங்கவில்லை. வருத்தமுடன் படுத்திருக்க, அன்றிரவு கனவில் நடராஜர், ''யாம் சொன்ன தட்சிணாமூர்த்தி திருவாரூர் தெருக்களில் திரிகிறான்!' என்றார். மறுநாள், வீதி வீதியாக அலைந்தார் சோமநாதர். ஒரு வீட்டு வாசலில் கிடந்த எச்சில் இலையை நாய்கள் சூழ்ந்திருக்க சாப்பிட்டு கொண்டிருந்தார் சுவாமிகள். சோமநாதருக்கு,''சிதம்பரம் நடராஜர் சொன்ன தட்சிணாமூர்த்தி இவரே' என்பது புரிந்தது. அதை உறுதி செய்யும் விதமாக, ''நடராஜன் உன்னை இங்கு அனுப்பினானா?' எனக் கேட்டார் சுவாமிகள்.கேட்டதோடு, சிறிது உணவை சோமநாதர் வாயில் இட்டார். பரவசம் அடைந்த சோமநாதர், பீடித்த வயிற்று வலி நோய் நீங்குவதை உணர்ந்தார்.'யாம் பெற்ற இன்பம்; பெறுக இவ்வையகம்' என அனைவரிடமும் தெய்வீக அனுபவத்தை விவரித்தார் சோமநாதர்.சிதம்பரம் நடராஜரால், 'தட்சிணாமூர்த்தி' என சுட்டிக்காட்டப்பட்ட அவரே, 'தட்சிணாமூர்த்தி சுவாமிகள்' என அழைக்கப்பட்டார். இவரது கோயில், 'ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடம் 'என்னும் பெயரில், திருவாரூர் முக்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ளது.தொடரும்அலைபேசி: 97109 09069பி.என் பரசுராம்