உள்ளூர் செய்திகள்

இதுவே உனக்கான பரிசு

ஒரு ஆற்றங்கரையில் விறகு வெட்டி மரம் வெட்டச் சென்றான். அவனுடைய கோடாரி தவறுதலாக கை நழுவி ஆற்றுக்குள் விழுந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். அவன் மனதிற்குள், “ஆத்தா மகமாயி உன் கோயிலில் பொங்கல் திருவிழா வரப் போகிறதே.. கையில் காசில்லாத இந்த நேரத்தில் இப்படியாகி விட்டதே...” என்று முறையிட்டான்.காட்டில் அருள்புரியும் வனதேவதை விறகுவெட்டியின் முன் தோன்றினாள். தண்ணீருக்குள் இருந்து ஒரு தங்க கோடாரியைக் கொண்டு வந்து, “இதுவா உன் கோடாரி” என்று கேட்டாள்.“இல்லை தாயே! சாதாரண இரும்பு கோடாரி என்னுடையது” என்றான்.தண்ணீருக்குள் சென்ற தேவதை ஒரு இரும்பு கோடாரியை எடுத்து வந்து, “இதுவா” என்று கேட்டாள்.“ஆம் தாயே” என்று தலையசைத்தான். அவனுடைய நேர்மையைப் பாராட்டிய தேவதை இரண்டு கோடாரியையும் கொடுத்து ஆசியளித்தாள்.தேவதை அளித்த பரிசுடன் விறகு வெட்டி வீடு திரும்பினான்.இந்த விஷயம் அறிந்த பக்கத்து வீட்டுக்காரன் விறகு வெட்டி மீது பொறாமை கொண்டான்.“அம்பிகை இவனுக்கு மட்டும் தான் பரிசு கொடுப்பாளா. உலகிலுள்ள அனைவரும் அவளின் பிள்ளைகள் தானே...! எனக்கும் தான் கொடுப்பாள்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துக் கொண்டு காட்டிற்குப் புறப்பட்டான். வேண்டுமென்றே கோடாரியால் மரத்தை வேகமாக வெட்டினான். அவன் வீசிய வேகத்தில் கையில் இருந்த கோடாரி ஆற்றில் நழுவி விழுந்தது. “அம்மா....! மகமாயி! நானும் உன் பிள்ளை தானே...! எனக்காகவும் ஓடி வரமாட்டாயா... தாயே...! ” என்று உருக்கமாக அழைத்தான். தேவதையும் அவன் முன் தோன்றி நின்றாள். “இதோ... உன் கோடாரியை இப்போதே தருகிறேன்” என்று சொல்லி தண்ணீருக்குள் மறைந்தாள். ஒருவேளை தனக்கு தங்க கோடாரி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று பரபரத்தான்.ஆனால் தங்க கோடாரியுடன் வந்த தேவதை, “இதுவா... உன்னுடையது” என்று கேட்டாள்.பேராசையால், “ஆமாம் தாயே... ஆமாம்” என்று வேகமாகக் கை நீட்டினான்.ஆனால் தேவதை மாயமாக அங்கிருந்து மறைந்தாள். பேராசையால் இருந்ததையும் இழந்த அவன் அழுதபடி நின்றான். இரக்கப்பட்ட தேவதை சிறிது நேரத்தில் அவன் முன் வந்தது.“மகனே... வருந்தாதே! பேராசை என்னும் இருள் சூழ்ந்தால் இருப்பதையும் மனிதன் இழக்க நேரிடும். நேர்மை என்னும் விளக்கை மனதில் ஏற்றி வைத்தால், நன்மை இரட்டிப்பாகும். இந்த உண்மையை உணர்ந்து கொள். இதுவே உனக்கான பரிசு” என்று சொல்லி மறைந்தாள்.