உள்ளூர் செய்திகள்

இந்த நாள் நல்ல நாள்

பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்குதான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என யாரும் சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை பலரது மனதில் ஓடுகின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என சொல்கின்றனர். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது. சரஸ்வதி பூஜையின் மறுநாளான விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக்கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதியின் அருள் முழுமையாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக்கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது.