உள்ளூர் செய்திகள்

விட்டலனின் விளையாட்டு - 32

பக்குவமடைந்த ​பானைகள் ஸந்த் ஞானேஸ்வரர் எழுதிய 'பண்டரீசே வாடே' என தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள். 'பண்டரிபுரம் செல்லும் ஆர்வத்துடன் அதற்கான வழியில் நடந்து சென்றாலே ஆயிரமாயிரம் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும். அந்த மார்க்கத்தில் நல்லவர்களின் தொடர்பு ஏற்படும். அ​ந்த மார்க்கம் உருவாக்கியவர் பக்த புண்டலீகன். பண்டரிபுரத்தில் தம்பூரா, தாளம், கருட சின்னங்களைச் சுமந்து செல்லும் அடியார்களின் நாம சங்கீர்த்தனம் கேட்டபடியே இருக்கும். மூவுலகிலும் இது போல காண முடியாது. வானுலக தேவர்களும் இங்கு மரங்களாக நின்று பாண்டுரங்கனை துதிக்கின்றனர். சனகாதி முனிவர்கள் அவனை தியானம் செய்தபடி இருக்கிறார்கள். பிரம்மனால் கூட பண்டரிபுர மகிமையை விளக்க முடியாது. ...'ஞானேஸ்வர் சரிதம் முழுமையடைந்து விட்டதா?' எனக் கேட்டாள் பத்மாசினி.'கடல் நீரை உள்ளங்கையில் அடக்க முடியுமா?' என திருப்பிக் கேட்டார் பத்மநாபன். 'ஞானேஸ்வரர், துகாராம் போன்றோர் வாழ்வில் நடந்த அற்புதங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை தான் கூறியிருக்கிறேன். விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தி​ல் பார்க்கலாம்' என்றார் பத்மநாபன்.'நீங்கள் கூறிய பக்தர்களின் வரலாறு பண்டரிபுரத்தின் மேன்மையை மேலும் மேலும் அதிகமாக்குகிறது' என்றாள் பத்மாசினி. குழந்தைகள் மயில்வாகனன், மைத்ரேயி இருவரும் அதற்கு தலையசைத்தனர்.'ஸந்த் பஹிணிபாய் எழுதிய அபங்கம் நினைவுக்கு வருகிறது பத்மாசனி' என்றார் பத்மநாபன். 'சந்த்களின் ஆசி நமக்கு கிடைப்பதற்கு ஞானேஸ்வரர் அஸ்திவாரம் அமைத்தார். அதன்மீது கோயில் கட்டப்பட்டது. நாமதேவர் அதை விரிவுபடுத்தினார். அதில் பாகவதம் என்ற கொடிமரத்தை நிறுவினார் ஏக்நாத். கோபுர கலசம் ஆனார் துகாராம். நாம் மனப்பூர்வமாக பஜனை செய்வோம். மரியாதைக்குரிய சான்று என்னவென்றால் அன்று சந்த்கள் ஏற்றிய கொடி இன்னமும் பாண்டுரங்கன் கோயிலில் பறக்கிறது. அது என்றும் பறக்கும்' என்றார். இதை ஏற்பது போல தலையசைத்த பத்மாசினி, 'யாரோ பஹிணிபாய் என்றீர்களே... அவர் பற்றி சொல்லவில்லையே' என்றாள்.'அவர் குறித்து மட்டுமா? விட்டலனின் பக்தர்களில் ஏகநாதர், ராக்கா, சக்குபாய், தாமாஜி போல இன்னும் பலர் உள்ளனர். அவர்கள் பற்றி உரியநேரத்தில் சொல்கிறேன். அதற்குள் ஒருமுறை நாம் பண்டரிபுரம் செல்வோம்'' என பத்மநாபன் கூற அவர்களின் முகத்தில் உற்சாகம் பரவியது....பக்தர்களைத் தன் நண்பர்களாக விட்டலன் ஏற்றாலும் அவர்களுக்கு தலைக்கனம் வரும் போது தட்டி வைக்கவும் தயங்கியதில்லை.ஒருமுறை ஞானேஸ்வரரின் வீட்டில் நாமதேவர், கோராகும்பர் ஆகியோர் கூடினர். ஞானேஸ்வரரின் தங்கையான சிறுமி முக்தாபாயும் அங்கிருந்தாள். அவள் கோராகும்பரிடம் ' நீங்கள் மண்பானை செய்யும் போது அருகில் சிறுகழி இருக்கிறதே... எதற்கு?' 'அந்தக் கழியால் பானையைத் தட்டிப் பார்த்து நன்றாக வெந்திருக்கிறதா என்பதை தீர்மானிப்பேன்' என்றார் கோராகும்பர்.அப்போது ஞானேஸ்வரர் 'நம் தலையும் பானை போலத் தான். அதனுள்ளே உள்ள மூளை வெந்திருந்தால் நல்லது' என்றார் புன்னகையுடன். 'நம் மனம் பக்குவப்பட்டு இருந்தால் நல்லது' என்பது இதன் பொருள். உடனே சிறுமி, 'இங்கே இருப்பவர்களின் தலையை கழியால் தட்டிப்பார்த்து வெந்திருக்கிறதா எனக் கூற முடியுமா?' என சிரித்தபடி கேட்டாள் சிறுமி. கோராகும்பர் பதிலளிக்கத் தயங்கினார். ஞானேஸ்வரர் 'என் தலையை தாராளமாக தட்டிப் பார்க்கலாம்' என்றபடி கோராகும்பருக்கு எதிரில் தன் தலையை நீட்டினார்.ஞானேஸ்வரின் தலையை மிருதுவாகத் தட்டினார் கோராகும்பர். டங் என்ற ஒலி வரவே 'இந்தப் பானை நன்கு வெந்திருக்கிறது' என்றார்.அடுத்து நாமதேவரின் தலையை கோராகும்பர் தட்டியபோது ஒலி வெளிப்படவில்லை. உடனே முத்தாபாய் வெகுளித்தனமாக, 'இந்தப் பானை வேகவில்லை' என்றாள். நாமதேவர் கோபத்துடன், 'உங்களை விட நானே விட்டலனுக்கு நெருங்கியவன். அவனே நேரில் தோன்றி என் மனம் பக்குவப்பட்டு விட்டதை உங்களுக்கு சொல்வான்' என்றார்.தனக்கு ஆதரவாக விட்டலன் குரல் கொடுப்பான் என எண்ணியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெகுநேரம் காத்திருந்தும் விட்டலன் வரவில்லை. அவமானமாக கருதிய அவர் கோயிலுக்குச் சென்ற போது, ' நாமதேவா... உன் பக்தி உண்மையானதுதான். ஆனால் அது இன்னும் பக்குவம் பெற வேண்டுமே ஒழிய செருக்கு கொள்ளக் கூடாது. குருநாதர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் பயிற்சி எடு'' என்றார் விட்டலன். அப்படி ஒரு குருவைத் தேர்ந்தெடுத்து நாமதேவர் பயிற்சியும் பெற்றார். சனாதன தர்மத்தின் மேன்மையை, அது உணர்த்தும் சமத்துவத்தை இன்றளவும் சுட்டிக்காட்டுகின்றன விட்டலனின் காதணிகள்.மீனவன் ஒருவனுக்கு வலையில் இரண்டு அழகான மீன்கள் சிக்கின. அவற்றை விட்டலனுக்குக் காணிக்கையாக்க அவன் முடிவெடுத்தான். அன்று காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்த அவன் கண்ணீர்மல்க விட்டலன் சன்னதியில் காத்திருந்தான். அர்ச்சகர்கள் அவனை அங்கிருந்து கிளம்பு என அவசரப்படுத்தினர். அந்த மீனவன் அழத் தொடங்கினான். அப்போது கருவறையில் இருந்து பேரொளி கிளம்பியது. மீனவனிடம் இருந்த மீன்களை தன்வசம் ஏற்றுக் கொண்டது. அவை விட்டலனின் காதுகளில் காதணிகளாக மாறி துாங்கத் தொடங்கின. இன்றளவும் மகர குண்டலங்களுடன்(மீன் வடிவ காதணிகள்) விட்டலன் காட்சியளிக்க இதுவே காரணம். கண்ணன் விசேஷ குணமே அதுதானே. யோகியர்களும், முனிவர்களும் தியானம் செய்து எந்த சுகத்தை அடைந்தார்களோ அதே சுகத்தை ஆயர்பாடியில் வாழ்ந்த ஆயர்குலப்பெண்களும் அடைந்தனர். அவ்வளவு ஏன் அங்கிருந்த பசுக்கூட்டங்களும் அடைந்தன. அன்பும், பக்தியும் இருந்தால் போதும் என்பதைத் தான் விட்டலன் நமக்கு உணர்த்துகிறான். கடினமான மந்திரம், ஆண்டுக்கணக்கில் பயிற்சி, ஜபம், தபம், பாராயணம் போன்றவை தரும் பலன்களை எளிய பஜனை மூலமாக பெறலாம் என்பதே விட்டலனின் சிறப்பு. எளிய பக்தியும் முக்தி அளிக்கும் என்பதை சந்த்கள் எனப்படும் தன் பக்தர்களின் வாழ்வில் நடத்திய விளையாட்டுகளின் மூலமாக நிரூபித்திருக்கிறான் விட்டலன்.விட்டல விட்டல! ஜெய ஜெய விட்டல!. -முற்றும்ஜி.எஸ்.எஸ்.,98841 75874இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.