உள்ளூர் செய்திகள்

இரண்டில் எது சரியானது?

திருக்குறள், திருமந்திரத்தை படித்தார் பக்தர் ஒருவர். ஓரிடத்தில் இரண்டும் முரண்படுவதாக தோன்றியது. அதற்கான விளக்கம் காஞ்சி மகாசுவாமிகளிடம் கிடைக்கும் என முடிவெடுத்தார். சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்ற அவர் சந்தேகத்தைக் கேட்டார். ''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்ஆசைப்படப் பட ஆய்வரும் துன்பங்கள்ஆசை விட விட ஆனந்தமாமே!''என்கிறார் திருமூலர். அதாவது 'ஈசனைப் பற்றிக் கூட ஆசை கொள்ளாதே' என்கிறார்.திருவள்ளுவரோ 'ஆசையை கைவிடுவதற்கே ஈசனோடு உள்ள ஆசையை அதிகப்படுத்திக் கொள்' என்கிறார். 'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு'''சுவாமி! இரண்டில் எது சரியானது? எதைப் பின்பற்றுவது?'' எனக் கேட்டார்''திருவள்ளுவர், திருமூலர் ஒருவருக்கொருவர் முரண்படுவதாகத் தோன்றினாலும், வெவ்வேறு விதமான மனிதர்களை உத்தேசித்துச் சொன்ன கருத்துக்கள் இவை. புரிந்து கொண்டால் இரண்டும் சரி என்பது தெரியும். ஈசனாக இருந்தாலும் ஆசை வைக்க வேண்டாம் என்றது ஒருவனுக்கு. பற்றற்ற ஈசனின் பாதங்களைப் பிடித்துக் கொள் என்பது பற்றை விட விரும்பிய இன்னொருவனுக்கு. அத்வைத நெறியில் சிந்திக்கும் யோகிகள், ஈசனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைக் கூட துறக்க வேண்டும். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார்கள் அல்லவா? எனவே ஆசையை விட்டு விடு என்கிறார் திருமூலர். ஆனால் வாழ்வில் பற்றை விட விடுவது எளிதான விஷயமா? ஈசன் திருவடிகளில் மட்டும் பற்று வைத்தால் உலகப்பற்றுகள் எல்லாம் தானாக மறையும் என்கிறார் திருவள்ளுவர். இப்போது புரிகிறதா?'' என்றார் சுவாமிகள். மகிழ்ச்சியுடன் விடை பெற்றார் பக்தர். திருப்பூர் கிருஷ்ணன்தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.comகாஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.