கண்ணீர் வழிந்தோடுதே...
காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க விரும்பினர் தம்பதியர் ஒருவர். அவர்கள் தன் வீட்டு சமையல் மாமியிடம் எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்க்க வேண்டினர். அவரும் சிரத்தையுடன், 'ஓம் நமசிவாய' என சொல்லியபடி மாலையைக் கோர்த்தார். காஞ்சி மடத்திற்கு சென்ற தம்பதி சுவாமிகளின் முன்பு மாலையை சமர்ப்பித்தனர். மாலையை தானே கையில் எடுத்து கழுத்தில் அணிந்ததோடு தம்பதிக்கும் ஆசியளித்து குங்கும பிரசாதம் கொடுத்தார் மஹாபெரியவர். அதை பெற்று நகர்ந்த போது, 'இருங்கோ... ஓம் நமசிவாயா மாமியிடம் இதைக் கொடுத்து என் ஆசிர்வாதத்தைச் சொல்லுங்கோ” என குங்குமம் கொடுத்தார். அதைக் கேட்டதும் தம்பதிக்கு ஒரே வியப்பு! சமையல் மாமியின் பக்தியை அறிந்த சுவாமிகளைக் கண்டு பரவசப்பட்டனர். இதையறிந்த மாமியும் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். இதைப் போல இன்னொரு சம்பவம் வேறொருவர் வாழ்விலும் நடந்தது. காஞ்சி மஹாபெரியவரின் பிட்சாவந்தனத்திற்கு (துறவியர் பெறும் காணிக்கை) பொருட்கள் தர ஒரு தம்பதி விரும்பினர். அப்பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க அவர்களின் வீட்டு சமையல் மாமியும் உதவி செய்தார். மஹாபெரியவருக்கு சமர்ப்பிக்க சில்லறை நாணயங்களை அத்தம்பதி துணியில் முடிச்சாகக் கட்டிய போது, தன்னிடம் இருந்த நாலணா (25 காசு) ஒன்றையும் சேர்த்து, “பெரியவா... தயவுசெய்து இந்த ஏழையின் காணிக்கையை ஏத்துக்கணும்” என மாமி மனதிற்குள் வேண்டினார். மடத்துக்குச் சென்று பொருட்களை மஹாபெரியவரின் முன்னிலையில் சமர்ப்பித்தனர். நாணய முடிச்சில் இருந்த நாலணாவை மட்டும் எடுத்துக் கொண்ட மஹாபெரியவர், “என்ன பார்க்கறேள்? உங்க வீட்டு சமையல் மாமியிடம் தங்கக்காசு பத்திரமாக வந்து சேர்ந்திடுச்சுன்னு சொல்லுங்கோ” என புன்னகைத்தார். ஆசி பெற்று திரும்பிய தம்பதி நடந்ததை விவரித்த போது, “நான் கொடுத்த நாலணாவை தங்கக் காசுனு சொல்லி அந்த கருணைக்கடல் ஏத்துண்டாரா” என ஆனந்தக் கண்ணீர் விட்டார் சமையல் மாமி. காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.