பறக்கும் பாலம்
பாரசீக ஆட்சியாளர் ஒருவர் குதிரை மீது ஏறி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மூதாட்டி ஒருவர், ''எனக்கு நீதி வழங்க வேண்டும். அதை இந்தப் பாலத்தில் தருகிறீர்களா... அல்லது மேலே உள்ள அந்தப் பாலத்தில் வைத்து தருகிறீர்களா'' என வானத்தை நோக்கி கைகளை நீட்டினார். அவர் மேலே காட்டிய பாலத்தின் பெயர் 'ஸிராத்'. அது பற்றி தெரிந்து கொள்வோமா...மறுமை நாளில் 'இறைவனே காப்பாற்று' என மனிதர்கள் பிரார்த்தனை செய்வார்கள். அப்போது நரகத்தின் மேலே 'ஸிராத்' என்னும் பறக்கும் பாலம் வரும். அதைக் கடக்கும் போது கால்கள் வழுக்கி விழ நேரிடும். பாலம் எங்கும் இரும்புக் கொக்கிகள், அகன்ற, நீண்ட முட்களும் இருக்கும். இறை நம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னலைப் போல பாலத்தை கடந்து விடுவர். இதை கடந்து செல்லாமல் சுவனத்திற்குள் யாரும் நுழைய முடியாது. தீமை செய்தவர்களோ மூர்ச்சை அடைந்து நரகத்தில் விழுவார்கள். இதை எல்லாம் எண்ணிய ஆட்சியாளர், ''உங்களுக்கு நீதியை இப்போதே வழங்குகிறேன். மறுமைநாள் வரை இழுத்தடிக்க மாட்டேன். முதலில் நடந்ததை விளக்கமாகச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார். ''ஆடு ஒன்றை வளர்த்தேன். அதன் பாலை கறந்து விற்று பிழைப்பு நடத்தினேன். ஆனால் உங்களின் படை வீரர்களில் சிலர் அதை கொன்று சாப்பிட்டனர்'' என அழுதார். மறுநாளே குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை அளித்ததோடு, மூதாட்டிக்கு பத்து ஆடுகளை தானமாகவும் கொடுத்தார். 'நீதிமான்களுக்கு தீர்க்காயுளும், மறுமைநாளில் சுவனமும் கிடைக்கட்டும்' என பிரார்த்தனை செய்தார் மூதாட்டி.