ஆஹா... என்ன ருசி
நடுக்காட்டில் சிக்கிக் கொண்டான் ஒருவன். திடீரென புதரில் மறைந்து நின்ற சிங்கம் ஒன்று துரத்த ஆரம்பித்தது. பீதியுடன் ஓட ஆரம்பித்தான். பாழடைந்த கிணற்றுக்குள் குதித்தான். உடனே அதன் பக்கவாட்டில் இருந்த கொடியைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்தான். அப்பாடா... சிங்கத்திடம் இருந்து தப்பினோம் என எண்ணியபடி கீழே பார்த்தான். அடியில் மலைப்பாம்பு வாயைப் பிளந்தபடி இருந்தது. மேலே சிங்கம். கீழே பாம்பு என்ற இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டோமே என அழுதான். அவன் தொங்கிக் கொண்டிருந்த கொடியை வெள்ளை எலி ஒன்றும், கறுப்பு எலி ஒன்றுமாக இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருந்தன. கொடியும் பலமில்லையே என வருந்தினான். அப்போது அருகிலுள்ள மரத்தின் மீதிருந்த தேன் கூட்டில் இருந்து தேன்துளி சொட்டியது. உயிருக்கு போராடும் நிலையிலும் தன்னை மறந்து தேனைச் சுவைத்தான். ஆஹா... என்ன ருசி என்றான். இதுதுான் வாழ்க்கை. இந்த உதாரணங்களில் இருந்து சில விஷயங்களை உணர வேண்டும். * சிங்கம்தான் மரணம். ஒவ்வொருவரையும் மரணம் துரத்துகிறது. ஒருநாள் அது வந்தே தீரும். * பாம்புதான் கபுர் (புதைகுழி). ஒவ்வொரு மனிதனும் அதை அடைவான். அங்கு நன்மை செய்தவருக்கு இன்பமான வாழ்க்கையும், பாவம் செய்தவருக்கு துன்பமான வாழ்க்கையும் அமையும். * கொடி என்பது மனிதனின் நிலையற்ற வாழ்வு. வெள்ளை எலியும், கருப்பு எலியும் பகல், இரவுகள். இப்படித்தான் தினமும் வாழ்நாள் நகர்கிறது. * தேன் என்பது இந்த உலக வாழ்வில் கிடைக்கும் இன்பங்கள். மரணம் வருகிறது என்பதை உணராமல் உலக இன்பங்களில் மனிதன் மூழ்கிக் கிடக்கிறான்.