மண்ணில் சொர்க்கம்
ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்த ஷத்தாத் ஆட்சிக் காலத்தில் பூமியில் சொர்க்கத்தை கட்ட நினைத்தான். அதற்கு நிறைய தங்கம், வெள்ளி தேவைப்பட்டதால் தனக்கு கீழிருந்த சிற்றரசர்களுக்கு அறிக்கை அனுப்பினான். அதில், ' சொர்க்கம் அமைக்க இருப்பதால் மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளியை சேகரித்து அனுப்புங்கள்' என அறிவித்தான். மக்களை கட்டாயப்படுத்தி பெற்ற தங்கம், வெள்ளியை அவர்கள் அனுப்பி வைத்தனர். சொர்க்கம் கட்டும் பணிக்காக மூவாயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 120 சதுரடி தோண்டி பளிங்குக் கற்களை பதித்து குளத்தை ஏற்படுத்தினர். தங்கம், வெள்ளியால் ஆன கற்களால் சுவர் கட்டப்பட்டது. சுற்றிலும் கோட்டைச் சுவரை எழுப்பினான். அரண்மனையின் தளங்கள் எல்லாம் தங்கம், வெள்ளியால் அமைக்கப்பட்டன. சுற்றுச் சுவரில் பூசுவதற்கு கலவையாக கஸ்துாரி, அம்பர், குங்குமப்பூவை பயன்படுத்தினான். அரண்மனையைச் சுற்றி பூஞ்சோலை அமைத்தான். அதில் தங்கம், வெள்ளியால் ஆன இலைகள் கொண்ட மரத்தை நட்டான். இடையே மாதுளை, பலா போன்ற மரங்களை வளர்த்தான். மது, பால், தேன் ஆறுகளை ஓடச் செய்தான். நான்கு மைதானங்களை அமைத்தான். உணவு உண்ணுமிடத்தில் தங்க நாற்காலிகள், மேஜைகளை வைத்தான். சொர்க்கத்திற்கு வருவோருக்கு பணிவிடை செய்ய ஒரே வயதுள்ள அழகான பெண்களை நியமித்தான்.