நம்பிக்கையுடன் செயல்பட்டார்
தாயிப் வாசிகளின் துன்புறுத்தலைச் சகித்துக் கொண்டு, சில நாட்கள் புதிய ஊரில் தங்கினார் நபிகள் நாயகம். இதை அறிந்ததும் இவர் மீது கோபம் கொண்ட மெக்காவில் உள்ள குரைஷிகள் குதுாகலித்தனர். இவர் மெக்காவிற்கு திரும்பி வந்தாலும் திருப்பி அனுப்பத் தயாரானார்கள். இவர்களது நோக்கத்தை புரிந்து கொண்டவர் ஊருக்கு வெளியே இருந்தபடி துாது அனுப்பினார். இதில் 'இஸ்லாத்தில் சேருமாறு குரைஷிகளை கட்டாயப்படுத்துவது இல்லை என்றும், வேத வாக்கியத்தை மட்டும் கூறுவதற்கு இடம் தர வேண்டும்' என இருந்தது. இதற்கும் அவர்கள் மறுத்தனர். அப்பொழுது முத்யிம் இப்னு அதி என்பவர் அவர்களிடம், ''நம் தேசமானது நாட்டுப் பற்றுக்கும், அன்னியர்களுக்கு அளிக்கும் உபசாரத்துக்கும் பெயர் பெற்றது. அப்படியிருக்கும் போது உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த நம் சகோதரர் ஒருவரை, இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடத்தலாமா... அவரை தன் சொந்த வீட்டுக்கு வர விடாமல் தடுப்பது நியாயமாகுமா'' எனக் கேட்டார். இப்படி சொல்வதோடு அவர் நிற்கவில்லை.தன்னைச் சேர்ந்தவர்களை கூட்டிக்கொண்டு நாயகத்தை அழைத்தும் வந்துவிட்டார். அன்று முதல் அவர் வெளியே செல்லும்போது எல்லாம் முத்யிமும் கூடவே செல்வார். நாளடைவில் முத்யிமையும் அவதுாறாகப் பேசினர். இதனால் வருந்திய நாயகம் மறுநாள் முதல் தனியாக செல்ல ஆரம்பித்தார். அவர் பேசுவதை பிறருக்கு கேட்காதவாறு, குரைஷிகள் கூச்சலிட்டனர். இதையும் தாண்டி நம்பிக்கையுடன் தன் பணியை மேற்கொண்டார் நாயகம்.