மந்திரச்சொல்
தர்மம் செய்வதில் புகழ் பெற்றவர் முகமது. கேட்டவர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிய அவரது செல்வங்கள் அனைத்தும் குறையத் தொடங்கின. இவரது பெருமையறிந்த பக்கத்து ஊர்க்காரர் இஸ்மாயில் வந்தார். எனது குடும்பம் வறுமையில் தவிக்கிறது. குடும்பம் பிழைக்க உதவி செய்யுங்கள் என்றார். தன்னிடம் இருந்த கணிசமான தொகையை கொடுத்து வறுமையை போக்கிக் கொள் என உதவி செய்தார் முகமது. கடுமையாக உழைத்து பெரிய பணக்காரராக ஆனார் இஸ்மாயில். தர்மம் செய்தவரின் நிலையோ தலைகீழாக மாறியது. இருந்தாலும் அவர் யாரிடமும் சென்று கையேந்த விரும்பவில்லை. உதவி கேட்கவே கூச்சப்பட்டார். நாட்கள் நகர்ந்தன.ஒருநாள் வீதியில் இருவரும் சந்தித்தார்கள். நிலையை அறிந்து கொண்டார் இஸ்மாயில் ''தாங்கள் கொடுத்த பணத்தால் தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். நீங்கள் கொடுத்த பணத்திற்கு வட்டியும் சேர்த்து தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள்'' என சொன்னார். அப்போது அவருக்கு தர்மம் தலை காக்கும் என அவரது தாய் சொன்ன மந்திரச்சொல் நினைவுக்கு வந்தது.