| ADDED : ஆக 12, 2024 09:20 PM
'நடுநிலையுடன் செயல்பட வேண்டியவர், அரசியல்வாதி போல் செயல்படுவது நியாயமா...' என, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர், எதிர்க்கட்சியினர். ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாவதற்கு முன், மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்தார். அங்கு முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கை பின்பற்றினார்;இருவரும் தெருவில்இறங்கி சண்டைபோடாதது தான் குறை.ராஜ்யசபா தலைவர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுநிலையுடன் செயல்பட்டு, சபையை சுமுகமாகநடத்துவது, சபை தலைவரின் பணி.இந்த விஷயத்தில்ஜக்தீப் தன்கர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். சமீபத்தில் சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சனுக்கும், ஜக்தீப் தன்கருக்கும் வார்த்தை போர் வெடித்தது. இதன்பின், திரிணமுல் எம்.பி., டெரக் ஓ பிரையனுடன், ஜக்தீப் தன்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எரிச்சல் அடைந்த எதிர்க்கட்சியினர், அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. ஜக்தீப் தன்கர் ஆதரவாளர்களோ, 'அவருக்கு கொஞ்சம் முன் கோபம் வரும். எதிர்க்கட்சியினர் அதை பயன்படுத்தி, அவரை சீண்டுவது தான் இந்த பிரச்னைக்கு காரணம்...' என்கின்றனர். எதிர்க்கட்சியினரோ, 'வீட்டிலிருந்து புறப்படும்போது முன் கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு வர வேண்டியது தானே...' என, சூடாக பதிலடி கொடுக்கின்றனர்.