| ADDED : ஜூன் 10, 2024 01:49 AM
'எல்லாரும் தப்பித்து விட்டனர்; என் தலையை மட்டும் உருட்டுகின்றனர்...' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ்.இங்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., -- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசை உடைத்த அஜித் பவார், தற்போது அந்த கட்சியையும் தன் வசப்படுத்தி விட்டார். இதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, தற்போது கட்சியின் பெயர், சின்னத்தை தன் வசப்படுத்தி விட்டார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், தேசியவாத காங்கிரசின் இரண்டு அணிகளுக்கும், சிவசேனாவின் இரண்டு அணிகளுக்கும் இடையிலான சோதனைக் களமாக பார்க்கப்பட்டது. இதில் சிவசேனாவின் உத்தவ் தரப்பு ஒன்பது தொகுதிகளையும், ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஏழு தொகுதிகளையும் கைப்பற்றின. தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் தரப்புக்கு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. சரத் பவார் தரப்பு எட்டு தொகுதிகளை அள்ளியது. ஆனால், அஜித் பவாரைப் பற்றி எந்த சர்ச்சையும் எழவில்லை.அதே நேரத்தில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், தேவேந்திர பட்னவிசுக்கு எதிராக, கட்சிக்குள் கலகக் குரல் எழுந்துள்ளது. இதனால் விரக்தியில் இருக்கும் பட்னவிஸ், 'கடைசியில் என்னை முட்டுச் சந்தில் நிறுத்தி விட்டனரே...' என, கவலைப்படுகிறார்.