'உண்மையை தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால். தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் வெளியில் வருகிறதே...' என கவலைப்படுகிறார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத். உ.பி.,யில் மொத்தம், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. கடந்த, 2014, 2019 தேர்தல்களில் இங்கு அதிக இடங்களில் வென்ற பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த முறையும் இங்கு அதிக தொகுதிகளில் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தது, பா.ஜ., மேலிடம்.ஆனால், பா.ஜ.,வுக்கு 33 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு மூன்று இடங்களும் மட்டுமே கிடைத்தன. மற்ற மாநிலங்களில் கணிசமான வெற்றி கிடைத்ததால், பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்து விட்டது. உ.பி.,யில் ஏற்பட்ட தோல்வி, யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார், யோகி. 'கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை, பொதுப்பணி துறை அதிகாரிகளின் அலட்சியம் தான், நம் தோல்விக்கு காரணம்...' என, கட்சி நிர்வாகிகள் கூறினர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆதித்யநாத், 'கட்சியில் உள்ள பிரச்னைகளை சொல்வர் என பார்த்தால், ஒட்டுமொத்தமாக அதிகாரிகளை கை காட்டுகின்றனரே; இது என்ன புது குழப்பமாக இருக்கிறது...' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்.