'பெரிய பதவிக்கு அடித்தளம் போடுகிறார் போலிருக்கிறது...' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை கிண்டலடிக்கின்றனர், அவரது சக பா.ஜ., தலைவர்கள்.ஜோஷி, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்; இங்குள்ள, தார்வாட் லோக்சபா தொகுதியிலிருந்து, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். ஏற்கனவே, கர்நாடகா மாநில, பா.ஜ., தலைவராக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். சமீபத்தில், கர்நாடகாவின் ஹூப்பளியில் நடந்த கபடி போட்டியை துவக்கி வைத்து, 'உள்ளூர் விளையாட்டுகளை ஊக்கு விக்க வேண்டும். இதன் வாயிலாக உள்ளூரில் உள்ள வீரர்களை, சர்வதேச அளவில் புகழ் பெற வைக்க வேண்டும்...' என பேசினார். பின், தானும் களத்தில் இறங்கி, சிறிது நேரம் கபடி விளையாடினார். அப்போது, 'இளம் வயதில் நானும் கபடி விளையாடி உள்ளேன். எதிரணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்...' என்றார். இது தொடர்பான செய்திகள், அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியாகின. இதைப் பார்த்த, கர்நாடகாவைச் சேர்ந்த, சக பா.ஜ., தலைவர்கள், 'பிரகலாத் ஜோஷிக்கு மாநில அரசியலில் ஆர்வம் அதிகம். 'எப்படியாவது கர்நாடகாவின் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்காகவே எப்போதும் விளம்பர வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என நினைத்து, இதுபோல செயல்படுகிறார். 'ஆனால், கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. அதுவரை இவருக்கு பொறுமை இருக்குமா...' என, கிண்டலடிக்கின்றனர்.