| ADDED : ஜன 03, 2024 09:08 PM
'இந்த முறை இவர் கண்டிப்பாக எம்.பி.,யாகி விடுவார்...' என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பற்றி பொறாமையுடன் கூறுகின்றனர், சக நடிகையர். இவர், ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் படங்களில் நடித்துள்ளார். அரசியல் ஆர்வமுள்ள கங்கனா, சமீபகாலமாக பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசி வருகிறார். பிரதமர் மோடியையும், மத்திய அரசின் திட்டங்களையும் புகழ்ந்து, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். எளிதாக வெற்றி பெறுவதற்காகவும், மக்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவும், அரசியல் கட்சியினர் சினிமா நட்சத்திரங்களை வேட்பாளர்களாக நிறுத்துவது வழக்கம்.கடந்த லோக்சபா தேர்தலில் ஹேமமாலினி, சன்னி தியோல், ரவி கிஷண் போன்ற சினிமா பிரபலங்கள், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த வரிசையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட கங்கனா விரும்புவதாகவும், அதற்கு பா.ஜ., மேலிடம் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.ஹரியானாவில் வாய்ப்பு கிடைக்கா விட்டால், தன் சொந்த மாநிலமான ஹிமாச்சலில் போட்டியிடவும் கங்கனா தயாராக உள்ளார்.'கங்கனாவுக்கு இனி சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும், அரசியலில் ஏறுமுகம் தான். பெரிய பதவிகள் அவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு...' என்கின்றனர், சக நட்சத்திரங்கள்.