தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி: அன்பிற்குரிய அன்புமணி அவர்களே, அரசியலில் கொஞ்சமாவது நாவடக்கம் வேண்டும். நீங்கள் அ.தி.மு.க.,வுடன் அணி சேர்ந்து லோக்சபா தேர்தலில் ஏழு இடங்களில் நின்றீர்களே. எத்தனை இடங்களில் வென்றீர்கள் என்பதை எண்ணிப் பார்த்துப் பேசுங்கள்.
டவுட் தனபாலு: ஏங்க... அன்புமணியைத் திட்டுறதா இருந்தா, வேற எதையாவது சொல்லி திட்டுறது தானே... எதுக்கு தேர்தல் தோல்வியை எல்லாம் பேசுறீங்க...? 'போன சட்டசபை தேர்தல்ல, 119 தொகுதியில போட்டியிட்டு, எத்தனை தொகுதியில ஜெயிச்சீங்க'ன்னு அவரு கேட்டுட்டா, நீங்க என்ன பதில் சொல்வீங்க...?
தமிழக முதல்வர் ஜெயலலிதா: அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி, பிரதமருக்குத் தந்தி, எம்.பி.,க்கள் ராஜினாமா அறிவிப்பு, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என, பல்வேறு நாடகங்களை கருணாநிதி நடத்தியபோது வாய் திறக்காத கோத்தபய ராஜபக்ஷே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் எனில், அந்த அளவுக்கு இதன் தாக்கம் இருக்கிறது.டவுட் தனபாலு: நல்லவேளை உங்க தீர்மானத்தோட தாக்கத்தைப் பத்தி மட்டும் பேசிட்டு, விட்டுட்டீங்க... நீங்க அடுக்கினதைப் பார்த்தா, 'ஆகவே, கோத்தபய ராஜபக்ஷேவுக்கும், கருணாநிதிக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது' என சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்...!
தி.மு.க., தலைவர் கருணாநிதி: ஈரோடு மாவட்ட தி.மு.க., செயலர் என்.கே.கே.பி. ராஜாவை கைது செய்து, 'ரிமாண்டில்' வைப்பதற்கு, எந்தச் சான்றுகளையோ, காரணங்களையோ தெரிவிக்கவில்லை எனக் கூறி, அவரை ரிமாண்டில் வைக்க ஒப்புதல் அளிக்க முடியாது என நீதிபதியே கூறிவிட்டார். இதிலிருந்தே, ராஜா மீதான வழக்கு பொய் வழக்கு என தெரிகிறதா, இல்லையா...?
டவுட் தனபாலு: இதே ராஜா மேல ஆள் கடத்தல் புகார் வந்தபோது, 'அதில் முகாந்திரம் இருப்பதாக கருதுவதால், அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்'னு நீங்களே சொன்னீங்களே... அதிலிருந்தே, அவர் அப்படிப்பட்ட ஆள் தான்னு தெரிகிறதா, இல்லையா...?