இனியாவது யோசிப்பாரா திருமா?என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் முதல்வராக முடியாது' என்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். தெரிந்தோ தெரியாமலோ ஒரு உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட திருமாவுக்கு நன்றி. பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில், கக்கன் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராகஇருந்தார். இவருக்கு காவல் துறை என்ற முக்கிய துறையை ஒதுக்கி, பெருமை சேர்த்தார் காமராஜர். அதன்பின் வந்த ஆட்சிகளில் தலித் சமூகத்தை சேர்ந்தோர், சாதாரண அமைச்சர்களாகத் தான் பதவி வகிக்க முடிந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்தோர், இந்தியாவின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை வகித்துள்ளனர். இதைவிட பெருமை வேறு என்ன இருக்க முடியும்?தலித் சமூகத்தைச் சேர்ந்த பலர் கவர்னர்களாக இருந்துள்ளனர். அதே நேரம், யாரும் இதுவரை பிரதமர் பதவியை வகித்ததில்லை. உத்தர பிரதேசத்தில் மாயாவதி என்ற தலித் பெண்மணி முதல்வராக இருந்துள்ளார். ஆனால், தமிழகத்தில் தலித் சமூகத்துக்கு முதல்வர் பதவி என்பது, திராவிட கட்சிகள் ஆட்சி இருக்கும் வரை குதிரைக்கொம்பு தான்.இதையே விரக்தியுடன் திருமாவளவன்கூறியுள்ளார். ஆனால், இதை, திராவிட கட்சிகளுடன் காலம் காலமாக கூட்டணி வைப்பதற்கு முன்பே அவர் யோசித்திருக்க வேண்டும். இனியாவது யோசிப்பாரா?வரலாற்றுப் பிழை இது!ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து நாட்டில்இருந்து அனுப்பிய,'இ-மெயில்' கடிதம்: காவிரியைத் தாயாகவும், தெய்வமாகவும், அதன் உப நதிகளையும் மதித்து வழிபடுவோர் டெல்டா விவசாயிகள். ஆண்டுதோறும், ஜூன் 12 என்றாலே, அவர்களுக்குக் கொண்டாட்டம் தான்!ஆடிப்பெருக்கு அன்று, ஆற்றங்கரைகள் விழாக்கோலம் பூண்டு கிடக்கும். புதுமணத் தம்பதியர், மண நாளில் அணிந்த மாலைகளுடன் வந்து, காவிரித் தாயை வணங்கி, நீர் வழிபாட்டுப் பூஜைகளையெல்லாம் செய்து, உற்சாக உலா வருவர்.சமீப ஆண்டுகளில் சில பொய்த்துப் போனாலும், இந்த ஆண்டு கூட, கர்நாடக அரசு, உரிய தண்ணீரைத் திறக்க வேண்டுமென்று, டெல்டா வேளாண் மக்கள்போராட்டமெல்லாம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தைக் கண்ட வருண பகவானே இறங்கி வந்து, அவர்கள் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும்படியாக மழையைக்கொட்டித்தீர்த்தார். 8,000 கன அடி என்றவர்கள், ஒன்றரை லட்சம் கன அடி நீரை, சந்தடியில்லாமல் திறந்து விட்டனர்!மேட்டூர் அணை பல முறை தன் கொள்ளளவை எட்டி, விவசாயிகளை மேலும் மகிழ்ச்சியில் பொங்கச் செய்தது. மேட்டூர் அணையும் திறக்கப்பட்டது; கல்லணையையும் நீர் வந்து முத்தமிட்டது! ஆனால் டெல்டா மாவட்டங்களுக்கு, குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினின் சொந்த மாவட்டமான திருவாரூ ருக்கு நீர் வந்து சேரவில்லை!ஆடிப் பெருக்கன்று புதுமணத் தம்பதியருடன், அவர்கள் குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்து விட்டனர். ஆரவாரமும், உற்சாகமும் இல்லாமல் ஓடி விட்டது ஆடிப்பெருக்கு. என்ன தான் நடந்ததென்று அறியாமல் விவசாயிகள் தவித்தனர்.இப்போது தான், ஆற்று வெள்ளமாக அலை மோதி, செய்திகள் வெளிக் கிளம்புகின்றன... கரை வேட்டிகளின் கமிஷனே தாமதத்திற்குக் காரணமாம்; ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால், வேலை செய்ததாகக் கூறி பில் போட முடியாதாம்!இவையெல்லாம் முதல்வரின் கவனத்திற்குச்செல்கின்றனவா என்பதே தெரியவில்லை.உண்மையில் அதுவே காரணமாக இருப்பின், சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களையும், துணை போன அதிகாரிகளையும், விவசாயிகள், களையை வேரோடு பிடுங்கி எறிவதைப்போல், துாக்கி எறிய அவர், ஆவன செய்ய வேண்டும்.இதுபோன்ற வர லாற்றுப் பிழை, இனியொரு முறை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!மக்கள் நலனில் அக்கறை வேண்டும்!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்கள் நலனை பார்ப்பதைவிட, தங்கள் நலனை மட்டுமே முதன்மையாக பார்ப்பதால், பல இடங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பஸ் நிலையங்கள், உழவர் சந்தைகள், ஆடு வதை கூடங்கள், மீன் மார்க்கெட் என, அரசு பணத்தில் வீணாக கட்டடங்களை கட்டுகின்றனர். இதில், நிலத்தின் வாயிலாகவும், கட்டடங்கள் கட்டியது வாயிலாகவும் பல கோடிக்கணக்கான அரசு பணத்தை அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் சுருட்டுகின்றனர். இதன் காரணமாக, மக்களது வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் ஒன்றை பார்க்கலாம்.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் பாதையில், 12 ஆண்டுகளாக தொடர்ந்த மக்களின் போராட்டத்திற்கு பின், தற்போது ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்ட, சிவகாசி காங்., - எம்.எல்.ஏ., தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு, வேலையையும் ஆரம்பித்தனர்.ஆனால், தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரும், தொழிலாளர்களும் சென்று வருவதற்கு எந்தவித மாற்றுப்பாதையும் ஏற்பாடு செய்யாமல், குழிகளைத் தோண்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இப்பிரச்னையில் உதவி கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு, குழியை மூடி போக்குவரத்துக்கு வழிசெய்தனர்; அதனால், தற்போது பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறும் மாற்று வழியாக மக்கள் சென்று வருவதென்றால்,கிட்டத்தட்ட 5 கி.மீ., தொலைவு சுற்ற வேண்டும்; இதனால், உரிய நேரத்திற்கு செல்ல முடியாது. எனவே, ரயில்வே பாலம் கட்டும்பணி ஆரம்பிக்கும்முன்பாக, மக்கள் எளிதாக சென்றுவர பாதையை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.மக்கள் நலன் மீது துளியாவது அக்கறை உள்ள அதிகாரிகளாக இருந்திருந்தால், முதலில்போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்த பின்னரே,பாலம் கட்டும் பணியை துவங்கி இருப்பர்.ஆனால், அப்படிப்பட்ட அதிகாரிகளை, 'லென்ஸ்' வைத்துதான் தேட வேண்டும் போல!