அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார், மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தற்போது வரை உண்மையான குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. 'இந்த வழக்கில், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை' என்று பகுஜன் கட்சியின் தலைவர் மாயாவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூறுவதைப் பார்த்தால், சந்தேகம் ஏற்படுகிறது.சினிமாவில் தான், வில்லன்களை ஓட ஓட விரட்டிக் கொலை செய்யும் காட்சிகள் இடம் பெறும். இப்போது அக்காட்சிகளை, தலைநகர் சென்னையிலேயே காண முடிவதை அறியும்போது, நம் மாநிலம் எங்கே போகிறது என்ற அச்சம் எழுகிறது.பிரபல மருத்துவர் சுப்பையா, கூலிப் படையினரால் கொல்லப்பட்ட வழக்கில், 'சிசிடிவி' காட்சிகள் இருந்தும் கூட, குற்ற வாளிகள் மீதான குற்றம் நிரூபணமாகவில்லை என, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இப்படி கொடிய கொலைக் குற்றங்களை செய்பவர்கள், தங்களுக்கு எதிராக யாரும் சாட்சியம் அளிக்க முன்வர மாட்டர் என்ற தைரியத்திலும், அந்த கொலைக் குற்றத்தை செய்ய அவர்களுக்கு மிகப்பெரிய தொகை பரிசாக கிடைப்பதாலும், வழக்கு செலவையும் கொலைச் செய்ய சொல்பவர்களே கொடுத்து விடுவதாலும், எந்த இடத்திலும், யாரையும் கொல்ல அவர்கள் துணிந்து விடுகின்றனர். இந்த கூலிப்படையினரிடையே, தமிழகம் முழுதும் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. மதுரையில் உள்ள கூலிப்படையினர், சென்னை வந்து கொலை செய்துவிட்டு செல்வதும், சென்னையில் உள்ள கூலிப்படையினர் மதுரை சென்று கொலை செய்துவிட்டு வருவதும், சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.சிலர், மாநிலம் விட்டு மாநிலம் சென்று, பணத்திற்காக படுகொலைகள் செய்து வருவதும் உண்டு.இந்த கூலிப்படையினர், ஏதோவொரு அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் தலைவருடன் நெருக்கம் காட்டி, கட்சியிலும் பதவிகள் வாங்கிக் கொள்கின்றனர்.சென்னை போலீஸ் கமிஷனராக இருந்து, சமீபத்தில் மாற்றப்பட்ட சந்தீப் ராய் ரத்தோட், ஆம்ஸ்ட்ராங் வழக்கை விசாரித்து பேட்டி கொடுத்தபோது, சென்னையில் ஏ, பி, சி என, மூன்று பிரிவுகளாக ரவுடிகள் உள்ளதாகவும், இந்த பட்டியலில், 4,000 ரவுடிகள் உள்ளதாகவும், அவர்களில் 758 பேர், சிறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.இது போன்று தான் ஒவ்வொரு மாநகரிலும், தமிழக ரவுடிகள் லிஸ்ட் உள்ளது. இவர்களில் 99 சதவீதம் பேர், ஏதோவொரு அரசியல் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு தான் வலம் வருகின்றனர்.இன்றைய தி.மு.க., அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன், தமிழகம் முழுதும் உள்ள ரவுடிகள் லிஸ்ட் ஒன்றை, அப்போதைய தமிழக காவல் துறை தலைமை அதிகாரியாக இருந்த சைலேந்திர பாபு எடுத்து, முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அந்த லிஸ்ட்டில் பெரும்பாலான ரவுடிகள், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இருந்து வருகின்றனர் என்பதை, புள்ளி விவரங்களுடன் கொடுத்ததாகவும், முதல்வர் ஸ்டாலின் அந்த ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு இட்டதாகவும், நாளேடுகளில் செய்திகள் வெளியாகின.ஆனால், அரசியல் கட்சித் தலைவர்களின் சட்ட விரோத செயல்களுக்கு இந்த ரவுடிகள் உதவி தேவை இருப்பதால், அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்க, காவல் துறை அதிகாரிகளால் முடிவது இல்லை. இதனால் தான் கூலிப்படையினர் கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 'என்கவுன்டர்'கள் பல நடத்தியதால், ரவுடிகள், தங்களது உயிருக்கு பயந்து, அண்டை மாநிலங்களில் பதுங்கினர்.இப்போது, எந்த ரவுடி மீதும், ஒருவர் புகார் கொடுக்கச் சென்றால் அவர் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான் உண்மை. நாய் கூட பட்டம் பெறும் வகையில் கல்வி தரம் போச்சே!
என்.நக்கீரன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதிவாரி
ஒதுக்கீட்டால் தான், பலர் டாக்டர்கள் ஆகியுள்ளனர். பட்டப்படிப்புகள்,
திராவிட இயக்கம் போட்ட பிச்சை. அதனால் தான் இன்று, நாய் கூட பி.ஏ., பட்டம்
பெறுகிறது' என்று, இழிவாகப் பேசி இருக்கிறார், தி.மு.க., அமைப்பு செயலர்
ஆர்.எஸ்.பாரதி.இவரது வாய்த்துடுக்கான உளறல் பேச்சால், தமிழகத்தில் கஷ்டப்பட்டு படித்த பட்டதாரிகள் அனைவரையும் அவமானப்படுத்தி விட்டார்.மதுரையில்,
உயர் நீதிமன்றத்தின் கிளை அலுவலகம் வந்தது கூட கருணாநிதி போட்ட பிச்சை
என்று, இதற்கு முன் உளறிக் கொட்டி பலரது பலத்த கண்டனதுக்கு ஆளானவர் தான்
இந்த அறிவுஜீவி.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனக்கு டாக்டர்
பட்டம் கிடைக்க கருணாநிதி, எப்படி எல்லாம் தில்லுமுல்லுகள் செய்தார்
என்பது, அனைவரும் அறிந்ததே.ஆர்.எஸ்.பாரதியின் கூற்றுப்படி இப்போது,
நாய் கூட பி.ஏ., பட்டம் பெற முடிகிறது என்றால், அந்த அளவுக்கு, திராவிட
மாடல் ஆட்சியில் கல்வியின் தரம் தாழ்ந்து விட்டது என்று தானே அர்த்தம்!இட
ஒதுக்கீடு வந்த பிறகு, பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருகி இருக்கலாம்; ஆனால்
எத்தனை பேர் திறமைசாலிகளாக இருக்கின்றனர் என்பது கேள்விக்குறி தானே!இன்று பட்டதாரிகளில் பலர், தமிழில் பிழை இன்றி எழுத முடியாமல் தவிக்கின்றனரே! தமிழ்ப் பாடத்தில் எத்தனையோ பேர், பாஸ் மார்க் எடுக்க முடியாமல், தேர்வில் தோல்வியைத் தழுவும் நிலையில் தானே இருக்கின்றனர்! மற்ற
பாடங்களில் சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் போது,
தமிழ்ப் பாடத்தில் சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கை, ஐந்துக்கும் குறைவாகத்
தானே இருக்கிறது? திராவிட இயக்கம் போட்ட பிச்சையால், வாழைப்பழச்
சோம்பேறிகளின் எண்ணிக்கை தான் பல மடங்கு பெருகியதே தவிர, தரமான
கல்வியாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனது நிதர்சனமான உண்மை.நீட் தேர்வைச் சந்திக்க முடியாமல், அதை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் தானே, இன்று திராவிட இயக்கங்களிடம் மேலோங்கி இருக்கிறது? திராவிட
இயக்கம் போட்ட பிச்சையால், நாய் கூட பி.ஏ., பட்டம் பெறலாம்; ஆனால்,
கல்வியின் தரம், அதல பாதாளத்திற்கு போய்விட்டதே? அதற்கு பாரதி என்ன பதில்
சொல்வார்?