உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தேர்தல் கமிஷன் விழிச்சிக்கணும்!

தேர்தல் கமிஷன் விழிச்சிக்கணும்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சொர்க்கம் என்ற திரைப்படத்தில், 'சொல்லாதே யாரும் கேட்டால்' என்ற கண்ணதாசன் பாடலில், 'உரிமையோ உரிமை என்று மேடையில் கூச்சல் போட்டான்; கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன?' என்ற வரிகள் வரும். இந்த வரிகள், இப்போதைக்கு சாலப் பொருந்தும்.நம்மை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை, முற்றிலும் நமக்கு தான் உண்டு. அந்த உரிமையை, பலரும் அலட்சியப்படுத்துகின்றனர். அதற்கு பல காரணங்களையும் சொல்கின்றனர்!'போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், படிக்காத தற்குறிகள், கேடிகள், கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள், இத்யாதி இத்யாதி. இப்படிப்பட்ட தகுதியில்லாதவர்களை வேட்பாளர்களாக தேர்தலில் நிற்க வைத்தால், எப்படி மனசாட்சியுடன் இவர்களுக்கு ஓட்டு போட முடியும்?' என்பதே, இவர்களின் கேள்வி.ஆனால் ஒன்று...பேசுவதற்கு, விமர்சிப்பதற்கு, எழுதுவதற்கு என்று இந்நாட்டு மன்னனாய் பல சுதந்திர உரிமைகளை சுவாசிக்கும் இந்திய குடிமகன், ஓட்டு போட மாட்டேன் எனச் சொல்வதைத் தவிர்க்க, 'நோட்டா' என்ற தேர்வும் உள்ளதே! ஓட்டுப் பெட்டியில், அதற்கான பொத்தானை அழுத்தி விடலாமே!நோட்டா அதிகமானால், அதைக் குறைக்க என்ன வழி செய்யலாம் என, தேர்தல் கமிஷன் சிந்திக்குமே! நல்ல வேட்பாளர்களே போட்டியிட வேண்டும் என்ற சட்டம் கூட இயற்றப்பட வாய்ப்பிருக்கிறது.'ரோடு சரியில்லை, குழாயில் தண்ணி வரவில்லை, மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது' என, சுதந்திரம் கண்டு 75 ஆண்டுகள் தாண்டியும், அல்லாடிக் கொண்டிருக்கிறோம். சாலையில் இறங்கி, கோபத்தை வெளிப்படுத்தலாமே; நோட்டாவைப் போட்டு, காரி துப்பலாமே! 'இளையராஜாவின் சுயநல போக்குச் சரியில்லை, டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி கொடுக்கக் கூடாது' என்றெல்லாம், உரிமை பேசும் நாம், 'நோட்டா' உரிமையை கோட்டை விடுவது நியாயமா?'சொந்த ஊருக்குச் சென்று ஓட்டு போட்டு வர, பணம் செலவாகிறது என்பதால் பலரும் ஓட்டு போடவில்லை' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா சொல்வதையும், தேர்தல் கமிஷன் ஆழமாக கவனித்து, நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.'வாழைக்காய் பஜ்ஜி முதல் வாழ்க்கைத் துணை வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் கிடைக்கும் காலத்தில், ஓட்டுப் பதிவுக்கு மட்டும் ஏன் பழைய பஞ்சாங்கம்?' என, இதே பகுதியில் வாசகர் கடிதம் ஒன்றும் வெளியாகி இருந்தது.தேர்தல் கமிஷன் விழிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!

ஆசை நெஞ்சில் கை வைத்து சொல்லுங்களேன்!

ராமரைய்யன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சொத்து வைத்துள்ள ஒருவரின் மறைவுக்குப் பின், அவர் குடும்பத்தினர், 45 சதவீதம் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்; அதற்கும் வரி செலுத்த வேண்டும்; மீதமுள்ள 55 சதவீதம் அரசுக்கு சென்று, அது மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது' என... பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க சட்டம் அமைந்துள்ளதாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக, அதன் அயல் நாட்டு பிரிவு தலைவர், சாம் பிட்ரோடா விளக்கமளித்துள்ளார்.மேலோட்டமாக பார்ப்பதற்கு இது, காலாவதியான கம்யூனிச கொள்கை கவரிங் நகை போல பளிச்சிட்டாலும், இதை செயல்படுத்தும்போது, உருப்படாமல் போவதற்கே வாய்ப்புகள் அதிகம்!'ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே!' என, சகட்டுமேனிக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ் போன்ற கட்சிகளை, மக்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான்...கர்ண மகா பிரபுக்களே!  மக்கள் வாழ்வாதாரத்தில் சமநிலை ஏற்படுத்த, முதலில் உங்கள் வீட்டிலிருந்து துவங்குங்கள். ஊரை உலையில் போட்டு, நீங்கள் அடித்துள்ள புதையல்களை, மக்களுடன் பகிருங்கள். அயல் நாட்டு வங்கி அலிபாபா குகைகளில், நீங்கள் அடித்து வைத்துள்ள மக்கள் வரிப்பண நிதியை, மக்கள் முன் வையுங்கள் கஜினி, கோரி போன்ற சுல்தான்களும், ஆங்கிலேயர்களுமே வெட்கப்படும் அளவுக்கு, நீங்கள் வாரி சுருட்டிய வரிப் பணத்தை, மக்கள் சபையில் வைத்து, சரிசமமாக பிரித்து கொடுங்கள். உங்கள் குடியா முழுகிவிடும்?இதை நீங்கள் செய்தாலே, நம் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும். முப்போகம் விளைந்து, நாடு சுபிட்சமடையும். உலக வங்கிக்கே நாம் கடன் வழங்கலாம். தேர்தல் வாக்குறுதிகளாக, இவற்றைச் சொல்லுங்களேன்!நீங்கள் அத்தனை பேரும், உத்தமராக இருந்தால், உங்கள் ஆசை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்களேன், பார்ப்போம்.

கோடீஸ்வரி; ஆனால் கேடீஸ்வரி!

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமைச் சேர்ந்தவர் திராங் மை லான்;கோடீஸ்வர தொழிலபதிபர்.அந்த நாட்டிலுள்ள சாய்கோன் வணிக வங்கியில், 90 சதவீத பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களை பயன்படுத்தி அந்த வங்கியிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை, 'ஸ்வாஹா' செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.கடந்த 2012 முதல் 2022 வரை, 10 ஆண்டுகளாக நடந்த மோசடியில், வங்கிக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளார் இந்த கேடீஸ்வரி லான்.வியட்நாம் நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கில், விசாரணை நடத்திய அந்நாட்டு ஊழல் தடுப்பு மையம், 2022ல் திராங் மை லானை கைது செய்தது. அந்த கேடீஸ்வரியின் 1000த்துக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது.இந்த ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேடீஸ்வரி திராங் மை லானுக்கு, அந்த நாட்டு ஊழல் தடுப்பு மையம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.இதுவே நம் இந்தியாவாக இருந்தால், வழக்கை பதிவு செய்து அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கே 20 அல்லது 30 ஆண்டுகள் ஆகி இருக்கும்.அப்படியே விசாரிக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆணையத்தினரும் வெகுண்டெழுந்து, இந்நேரம் நாட்டையே கிடுகிடுக்க வைத்திருப்பர். பல இடங்களில் தீவைப்பு நடந்திருக்கும்; கலவரம் மூண்டிருக்கும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருக்கும்; போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும்; ரயில்கள் மறிக்கப்பட்டிருக்கும்; கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.நம் நாட்டு சட்ட மேதைகள், சற்று இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

veeramani
மே 03, 2024 12:43

இந்திய தேர்தல் கமிஷன் உலகையே பாராட்டும் ஒரு அரசு நிறுவனம் கடந்த தேர்தலில் கமிஷனின் செயல்பாடுகள் மிக அருமை இந்திய மக்கள் அனைவரும் வாக்கு போடுவதை கடமையாக செய்தால் ஒழிய நூறு சதவீதம் வாக்குப்பதிவு கனவே தமிழக தேர்தலில் நன்கு படித்த தமிழ்மக்கள் வசிக்கும் மத்திய சென்னை வாக்குப்பதிவு சுமார்தான் ஆனால் தர்மபுரி, சிவகங்கை, ராம்நாடு போன்ற மாவட்டங்களில் மிக நல்ல சதவீதம் பதிவு ஆனாலும் தற்போதைய அரசு சென்னைக்குதான் செல்ல பிள்ளை மற்றவர்கள் இரண்டாம்தாரத்து பிள்ளை என நடத்துகிறார்கள் இதற்கு காரணம்???


Anantharaman Srinivasan
மே 03, 2024 11:19

இதே நம் நாடாகயிருந்தால் முதலில் திராங் மை லானை வெளிநாட்டுக்கு தப்பவிட்டு இருப்பார்கள்


D.Ambujavalli
மே 03, 2024 07:06

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ரயில் ஸ்டேஷன்கள் எல்லாம் கூட்டத்தால் திணறி, சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போட முடியாமல் வீணான வாக்குகள் எத்தனையோ? அன்றாடங்காய்ச்சிகள் இதற்காக வேலை, கூலியை விட்டு எத்தனை நாள் முன்பு பயணப்படுவார்கள்? ஆன்லைன் முறையால் காசை வீசியெறிந்து ஓட்டு வாங்க முடியாது இன்னும் கற்காலத்திலேயே இருக்கும் தேர்தல் ஆணையம் என்று விழிக்கும்? அந்த கேடிஈஸ்வரிக்கு கிடைத்தது போல் இங்கு தீர்ப்பானால், நாடே சுடுகாடும், கல்லறையும் ஆகிவிடும் கால்ஸ்ஷன்லாம


Dharmavaan
மே 03, 2024 06:04

நம் நாட்டின் கேவலம் நீதியின் செயல்பாடு யார் திருத்துவது ஆனால் இது மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை