அ.குணசேகரன்,
வழக்கறிஞர், புவனகிரி, -கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: அன்று லால்பகதூர் சாஸ்திரி முதல் தற்போது மேற்கு வங்க
முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி வரை, அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சராக
இருந்த போது நடந்த ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, தங்களது
பதவிகளை ராஜினாமா செய்தனர்.ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள், ஊழல்
வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றாலும், தண்டிக்கப்பட்டாலும்,
உச்ச நீதிமன்றம் வரை சென்று தண்டனை உறுதி செய்யப்பட்டாலும், தங்கள்
பதவியில், 'கம்' போட்டு அமர்ந்து விடுகின்றனர்; அசிங்கமோ, அவமானமோ
படுவதில்லை.இதில் வெட்கப்பட வேண்டியது என்ன வென்றால், அவர்களை
மீண்டும் தலைவர் களாக ஏற்றுக் கொண்டு, அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம்
திரிவதைக் கண்டுதான்!தமிழகத்தின் இரண்டு திராவிடக் கட்சிகளும்,
இதில் விதிவிலக்கல்ல. அந்த வகையில், ஊழலுக்கு எதிராகப் போராடிய அன்னா
ஹசாரேவுடன் சாலையில் அமர்ந்த கெஜ்ரிவால், பின், டில்லி முதல்வராகி, தற்போது
காலிஸ்தான் தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய, அமெரிக்கா
மற்றும் கனடாவில் உள்ள அதன் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் பெற்று, தேச விரோத
செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதல்வர், பதவியில் இருக்கும் போதே அவரை அமலாக்கத் துறை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளது. பீஹார் முன்னாள் முதல்வர் லாலு போல, தன் மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தும் பணியில் இறங்க முடிவு செய்துள்ளார் கெஜ்ரிவால்.இது
ஒருபுறம் இருக்க, மத்தியில் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக புலானாய்வு
நிறுவனங்கள் செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்பதை
நிரூபிக்கும் வகையில், சந்தேகத்திற்கு இடமின்றி, நியாயமான முறையில்,
கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி, குறிப்பிட்ட காலத்திற்குள்
விசாரணையை முடிக்கலாமே! நடக்குமா? பணத்தை கிழித்து கப்பல் விடுவதா?
ஜி.சூரிய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்போது தேர்தலை சந்திக்கும் பல தமிழக வேட்பாளர்கள், பத்தாண்டுகளாக, எம்.பி.,க்களாக உள்ளவர்களே. இவர்களால், தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்து விட்டது; ஒன்றும் இல்லை.ஆனால், இவர்கள் மீது தவறில்லை; இவர்கள் சார்ந்த கட்சிகள், மத்திய அரசோடு இணக்கமாக இல்லை. அதனால் வேலை எதுவும் நடக்கவில்லை.நம் ஓட்டை, தெரிந்தே செயல்பட முடியாத ஒரு பிரதிநிதிக்கு போடுவது, நாம் உழைத்து பெற்ற பணத்தைக் கிழித்து கப்பல் விடுவது போன்ற செயல். இச்செயலை நாம் செய்தால், நம் பகுத்தறிவு நம்மைப் பார்த்து ஏளனம் செய்யும்.பாரம்பரியம் எனக் கருதி ஓட்டு போடாதீர்கள்; சின்னத்தின் மீது வெகுநாள் பற்று என, ஓட்டு போடாதீர்கள். காசுக்கு விற்பனை ஆகி விடாதீர்கள்.சுயேச்சைக்கு போடுவதாக இருந்தாலும், அவர் டில்லி சென்று நமக்காக நல்லது செய்யும்படியான நபரா என யோசித்து, ஆராய்ந்து, பின் ஓட்டு போடுங்கள்! ஐடியா கேட்டுக் கொள்ளலாம்!
என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இப்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டு சாப்பாடு, மெத்தை, போர்வை, தலையணை வசதிகள் இவருக்கு உண்டு.இத்தனை வசதிகள் செய்து கொடுத்த பிறகும், இவருக்கு நிம்மதியான துாக்கம் இல்லையாம். 'என் கணவர் சிங்கம்; அவரை நீண்ட நாட்கள் அடைத்து வைக்க முடியாது' என்கிறார் இவர் மனைவி.இந்த சிங்கம் தான், அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு ஆஜராகாமல், ஒன்பது முறைக்கு மேல் பதுங்கி வாழ்ந்தது.நம் திராவிடச் செம்மல்கள் அனைவரும், 'சிறைச்சாலை எங்களுக்கு மாங்குயில் கூவும் பூஞ்சோலை' என தம்பட்டம் அடிப்பர். இவர்களிடம் கெஜ்ரிவாலை ஐடியா கேட்டுக் கொள்ளச் சொல்லலாம்! இதுதாங்க பிரச்னை!
எஸ்.ஜான்சன், புதுச்சேரி யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசு வெள்ள நிவாரணம் தரவில்லை. வெள்ள நிவாரண செலவிற்காக தமிழக அரசு, வெளிநாட்டு வங்கியில், 5,000 கோடி கடன் வாங்கி உள்ளது' என்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கும் அளவு வசதி படைத்திருந்தால், எதற்கு மத்திய அரசிடம் கையேந்த வேண்டும்?விடுங்கள்... தேசிய பேரிடர் நிதியில், மத்திய அரசு, 58,000 கோடி ரூபாய் வைத்துள்ளதாம்; அந்த 58,000 கோடி ரூபாயில் இருந்து 37,000 கோடி கொடுங்கள் என்று கேட்டாராம். மத்திய அரசிடம் பணம் இருந்தும் கொடுக்க மனம் இல்லையாம்.உங்களிடம், 58 ரூபாய் உள்ளது. உங்களுக்கு, 10 பிள்ளைகள். அனைவருக்கும் பிரிக்க வேண்டும் எனில், ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா, ஐந்து ரூபாய் 80 காசுகள் தானே வரும்? ஒரு பிள்ளைக்கே, 37 ரூபாய் கொடுக்க முடியுமா?இதுதாங்க பிரச்னை! அவதி தான் போங்க!
சி.துரைராஜ், புதுச்சேரியில் இருந்து எழுதுகிறார்: காங்கிரஸ் ஆட்சியில், 'நீட்' தேர்வு கொண்டு வந்த போது தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என, அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினாராம். ஏன் வேண்டாம் என்று கூறினார் என்பது, கட்சிக் காரர்களுக்கே தெரியும். இப்போது ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றால், 'இண்டியா' கூட்டணியின் எதிர்காலம்? மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை பிடித்துவிட்டால், 2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தி.மு.க.,வின் மாஜி உறுப்பினரான சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக் மீது உள்ள வழக்கு துரிதப்படுத்தப்பட்டு விட்டால்? சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசி மாட்டிக் கொண்டதால், பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர் உதயநிதியின் கதி என்னாவது?அவதி தான் போங்க! விளக்குவாரா தேர்தல் அதிகாரி?
வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும் என, தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மிகவும் சரி, அந்த பட்டுவாடா பணம் எப்படி வருவாய்த் துறை, பறக்கும் படையினருக்கு தெரியாமல், பிடிபடாமல் உரிய இடத்தில் சேர்கிறது என்ற ரகசியத்தையும் அவரே தெளிவுப்படுத்த வேண்டும்.பொதுமக்கள் தங்கள் குடும்பத் தேவைக்கு, சுப செலவிற்கு, மருத்துவ செலவிற்கு, 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் மிகச் சரியாக பிடிக்கும் பறக்கும் படையினர், அது அவர்களது சொந்த தேவைக்கானது என்று தெரிந்தாலும் விடுவதில்லை.பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்து அந்த குடும்பத்தை தவிக்கவிடும் அதிகாரிகள் கண்ணுக்கு, வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லும் பணம் எப்படி தெரியாமல் போகிறது? இது அனைத்தும் மக்களுக்கு எழும் சந்தேகம். தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிப்பாரா?