வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுது கிறார்: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கைகள் நிறுவ, 5.75 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.வரவேற்கப்பட வேண்டிய விஷயம்!அதேநேரம், ஊண், உறக்கத்தை மறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்ட நம் முன்னோரை நினைவில் கொள்ள வேண்டியதும் தமிழக அரசின் கடமை!சங்ககால தமிழ் இலக்கிய நுால்கள் அனைத்தும் எங்கெங்கோ ஓலைச்சுவடிகளில் மறைந்தும், சிதறியும் கிடந்த நிலையில், அவற்றை எல்லாம் தேடி, தள்ளாத வயதிலும் கிராமந்தோறும் கால்நடையாக நடந்து கண்டுபிடித்து, அவற்றை நமக்கு தந்தாரே... தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்!அவருக்கு தமிழகம் செய்த மரியாதை என்ன?அவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய, சென்னை ராஜதானி கல்லுாரிக்கு, அவர் பெயரை சூட்டும்படி எத்தனையோ தமிழ் அறிஞர்கள் கோரிக்கை வைத்தும், அவர் பிராமணர் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, கடந்த கால அரசுகள் அதை கண்டுகொள்ளவே இல்லை.அதேபோன்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 'நாஞ்சில் நாட்டு கவிஞரான தேசிய விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்' என்று அறிவித்தார். அதுவும் அப்படியே காற்றோடு போனது.கம்பராமாயணத்தின் ஒவ்வொரு பாடலையும் விளக்கி, கம்பனின் புகழ் பரவ செய்தவர் டி.கே.சிதம்பரம் முதலியார். தமிழில் பெரும் பண்டிதரான இவருக்கு, அவர் கடைசியாக வாழ்ந்த குற்றாலத்தில் நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.இப்படி தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டோரை மறந்து போவது, ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் செயல்!எனவே, அமெரிக்க பல்கலையில் தமிழ் இருக்கைகள் நிறுவ நிதி ஒதுக்குவது போல், தமிழுக்காக வாழ்ந்து, மறைந்த தமிழ் அறிஞர்களின் நினைவை போற்றும் விதமாக, அவர்களுக்கு உரிய மரியாதையை த.வெ.க., அரசாவது செய்ய வேண்டும்!கொட்டம் அடங்க...
ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில், மோசடி நபர்கள் சிலர், மொபைல் போன் வாயிலாக பிரசாரம் செய்து, '53 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 45 நாட்களில் அப்பணத்தை இரட்டிப்பாக தருவோம்' என்று ஆசை காட்டி, நான்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டிய செய்தியை படித்ததும், 'எவ்வளவு பட்டாலும் இந்த மக்களுக்கு புத்தியே வராதா...' என்று, பணத்தை பறிகொடுத்தோர் மீதுதான் கோபம் வந்தது. ஏனெனில், இதுபோன்று போலி நிதி நிறுவனங்களிடம் பணத்தை பறிகொடுத்தோர் குறித்து அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அப்படியும் மக்கள் பாடம் படிக்கவில்லை என்றால் எப்படி? ஏமாற்றுவோர், 'கல்லை, வைரமாக்குவோம்; மண்ணை, தங்கமாக்குவோம்' என்று தான் கூறுவர். அதை கேட்பவர்கள் அல்லவா யோசிக்க வேண்டும், கல் எப்படி வைரமாகும் என்று! நாம் செலுத்தும் பணம் குறுகிய காலத்தில் இருமடங்காக திரும்ப கிடைக்கிறது என்றால், அப்பணத்தை அந்த நிறுவனம் எதில் முதலீடு செய்கிறது, எப்படி இருமடங்காக லாபம் கிடைக்கும் என்பதை மக்கள் யோசிக்க வேண்டாமா? பணம் இருமடங்காக கிடைக்கும் என்ற பேராசையில், பணத்தை பறிகொடுத்துவிட்டு, இப்போது சாலை மறியல் செய்வதும், அரசு மற்றும் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்துவதிலும் என்ன நியாயம் உள்ளது? முதலீடு செய்யும் முன் காவல் துறையினரிடம் ஆலோசனை பெற்றனரா அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் தான் அரசு அங்கீகாரம் பெற்றதா? தங்கள் பேராசைக்கு பணத்தை முதலீடு செய்து விட்டு, அதை இழந்த பின், சாலை மறியல் செய்து பொதுமக்களை எதற்கு சிரமப்படுத்த வேண்டும்? காவல் துறையும் இதுபோன்ற ஒயிட் காலர் மோசடி நபர்களை, 'என் கவுன்டர்' பட்டியலில் சேர்த்தால் தான், இனி வரும் காலங்களில் இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளின் கொட்டம் அடங்கும்! இந்த ஒரு விஷயத்திலாவது தமிழக அரசு, வளைகுடா நாடுகளை பின்பற்றுவது நல்லது! மாற்றி யோசியுங்கள் முதல்வரே!
எஸ்.வெங்கடேசன், சென்னை யில் இருந்து எழுதுகிறார்: சட்டசபை உறுப்பினர்களுக்கு கார், உதவியாளர், அவர்களுக்கான சம்பளம் உட்பட பல சலுகைகளை அறிவித்து உள்ளார், முதல்வர் விஜய். சட்டசபை உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து, மக்களுக்கு சேவை செய்வதாக கூறி, போட்டி போட்டு தேர்தல் காலத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்று, மக்களுக்கு நன்மை பயக்கும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தையும் பெறுகின்றனர். அவர்களது மக்கள் பணிக்காக அடிப்படை ஊதியத்துடன், மாதாந்திரபடி, தொகுதிப்படி, தொலைபேசி கட்டணம் மற்றும் தபால் செலவு படி, தொகுப்பு படி மற்றும் வாகனப்படி என்று கிட்டத்தட்ட, 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் மாதந்தோறும் அரசிடம் இருந்து பெறுகின்றனர். இதுதவிர, சட்டசபை உறுப்பினர் விடுதியில் தங்குவதற்கு அறை, உணவு இலவசம்! மேலும், பதவி காலம் முடிந்த பின்பும், இறக்கும் வரை ஓய்வூதியம் பெறுகின்றனர். இவ்வளவு சலுகைகளுக்கு மத்தியில், தற்போது இலவச கார், உதவியாளர், அவர்களுக்கு சம்பளம் என்று கூடுதல் சலுகைக்கு என்ன அவசியம்? தோராயமாக, 200 உறுப்பினர்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்தால் கூட, 20 கோடி ரூபாய் ஆகிறது. இதுபோக பராமரிப்பு செலவாக மாதம், 2 கோடி ரூபாயும், தொடர் செலவாக, 60 மாதத்திற்கு, 120 கோடி ரூபாயும் செலவாகும். பதவிக்காலம் முடிந்தபின், இந்த உறுப்பினர்கள், அரசிடம் அக்கார்களை திரும்ப ஒப் படைப்பரா அல்லது அவர்களே எடுத்துக் கொள்வரா என்பதும் தெரிய வில்லை. இதைவிட, எம்.எல்.ஏ.,க்கள், கார் வாங்க, அரசே வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்யலாம். அக்கடனை அவர்கள் பதவிக்காலமான, 60 மாதங்களில் மாதத் தவணையாக செலுத்தி, காரை அவர்களே எடுத்துக் கொள்ள செய்யலாமே! அரசு யோசிக்குமா?