உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தேர்தல் கமிஷன் கையில் ராமராஜ்யம்!

தேர்தல் கமிஷன் கையில் ராமராஜ்யம்!

டாக்டர். பா. நாகராஜ கணேஷ், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் பாரதம் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோரே இங்கு ஆட்சி செய்வர், இது தான் ஜனநாயகம் என்று கூறுகிறோம். ஆனால், நாம் தேர்ந்தெடுப்பவர்கள், ஆட்சிக்கு வந்த பின் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்து விடுகின்றனர்.இது, இவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் தவறு என்றாலும், தேர்தல் ஆணையமும் இதற்கு காரணம்.ஏனெனில், அவர்கள் தான் இவர்களின் மனுவை பரிசீலித்து, வேட்பாளர்களாக பட்டி யலிடுகின்றனர். ஒரு வேட்பாளரின் மீது வழக்கு இருந்தால், அதற் கான தீர்ப்பு வரும் வரை, அவர் எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது; வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட வேண்டும்.எந்த குற்றப் பின்னணி யும் இல்லாதவர்களை அங்கீகரிப்பதுடன், வேட்பாளர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வர்களாக இருக்க வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்ததும் வகையில், அவர்களோ, குடும்பத்தினரோ, நெருங்கிய உறவினரர்களோ எந்த தொழிலிலும் இருக்கக் கூடாது.இவற்றை கருத்தில் கொண்டு வேட்புமனுவை பரிசீலிக்க வேண்டும். தகுதியில்லாத, தவறான ஒருவரை மக்கள் தேர்ந்தெடுக்க காரணம், அவர்களின் மனுவை ஆணையம் ஏற்பதால் தான். எனவே, வேட்புமனு பரிசீலனையை கடுமையாக்கி, தீயவர்களை வடிகட்ட வேண்டும்.கட்சி, ஜாதி, மதம் என்று பாரபட்சம் பார்க்காமல், எந்த குற்றப் பின்னணியும் இல்லாத ஒருவரையே, தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கரித்தால் தான் ராமராஜ்யம் ஏற்படும்.ராமர் கோவில் திறந்த இந்நேரத்திலாவது, நல்லவர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வரவேண்டும். ராமராஜ்யம் ஏற்படுவது தேர்தல் ஆணையத்தின் கையில் தான் உள்ளது.

காங்கிரசுக்கு ஆறுதல் பரிசு கிட்டுமா?

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்தியில் ஆளும் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்ப வலுவான எதிர்க்கட்சி தேவை என, சில மாநில கட்சி தலைவர்கள் முயற்சித்து உருவாக்கியது தான், 'இண்டியா' கூட்டணி. இவர்களுக்கு பொதுவான கொள்கை, 'மோடி மீண்டும் பிரதமராக வந்துவிடக் கூடாது' என்பது மட்டும் தான். மற்றபடி மோடி ஆட்சியில் வேறு எந்த குற்றச்சாட்டையும் இவர்களால் சுமத்த முடியவில்லை.அதே நேரம், இண்டியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் நற்சான்றிதழ் என்னவென்று பார்த்தால், ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்., தமிழகத்தின் தி.மு.க., என எல்லா கட்சிகளுமே ஊழலில் ஊறி திளைத்தவை தான். இந்த கட்சிகள், பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றத்துக்கு நடையாய் நடக்கின்றன.இதற்கு மத்தியில், இண்டியா கூட்டணி பா.ஜ.,வுக்கும், பிரதமர் மோடிக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து பல ஊடகங்களும் எழுதி தள்ளின.பொதுவாக கிராமங்களில் சொல்வர்... 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பர். அதுபோல, இண்டியா கூட்டணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, கூட்டணிக்குள் முட்டல், மோதல்கள் உருவாகி விட்டன.மேற்கு வங்கம், பஞ்சாபில் காங்., கட்சியுடன் கூட்டணி இல்லை என, திரிணமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் திட்டவட்டமாக அறிவித்து விட்டன.இது, அடுத்தடுத்து பல மாநிலங்களிலும் தொடரும் என்றே தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் தான், தி.மு.க., - காங்., கூட்டணி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து நிற்கிறது.வடமாநிலங்களில் காங்., கட்சி புறக்கணிக்கப்படுவதை மனதில் வைத்து, இங்கும் அக்கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டை, தி.மு.க., குறைக்காமல் இருந்தாலே, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய ஆறுதல் பரிசாக அமையும்.

மாணவர்கள் சுகாதாரத்திற்கு யார் பொறுப்பு?

பி.ராஜேந்திரன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பி.எஸ்.சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில், அழுகிய நாய் சடலம் கிடந்ததை கண்டு பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்த செய்தி படித்தேன். இது, உண்மையில் அதிர்ச்சியும், வருத்தமும் அடைய வைக்கின்ற செய்தி. சில மாணவர்கள், இந்த துர்நாற்றத்தை முதலில் தெரிந்து கொள்ளாமல், அந்தக் குடிநீரை பருகியிருந்தால், அவர்களின் சுகாதாரத்திற்கு யார் பொறுப்பேற்பது? தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன், இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் குடிநீர் வசதி களை, குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யாவது அதிகாரிகள் சோதனையிட வேண்டும். மேலும், பள்ளி நிர்வாகமும் வாரத்திற்கு ஒரு முறையாவது பள்ளிகளில் இருக்கும் குடிநீர் தொட்டிகளை சோதனையிட்டு சுத்தப்படுத்துவது அவசியம். வாரம் ஒரு முறை என்பது முடியா விட்டால், மாதம் ஒரு முறையாவது சுத்தப்படுத்துவது, மாணவர்களின் சுகாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.காரணம், ஒரு நோய் வரும் போது, நான் இங்கிருந்து வருகிறேன் என்று சொல்லி வருவதில்லை. அசுத்தமான குடிநீரோ அல்லது சுற்றுச்சூழல் கூட பள்ளி மாணவர்களின் நலத்தை பாதிக்கலாம்.பெரும்பாலும் குடி போதைக்கும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கும் அடிமையானவர்கள், சுற்றுச்சுவர் இல்லாத இதுபோன்ற பள்ளி வளாகங்களை, இரவுப் பொழுதில் ஆக்கிரமித்து விடுகின்றனர். அவர்களது செய்கைகள் கூட இதுபோன்று பிராணிகள் தொட்டியில் இறந்து கிடக்க காரணமாக இருக்கலாம்.மொத்தம், 350 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியே இந்த கதியில் இருக்கும் போது, மாணவர்கள் குறைவாக படிக்கும் மற்ற பள்ளிகளின் நிலையைப் பற்றி சொல்ல தேவையில்லை. சாதனைகள் என்று தங்களது ஆட்சியை பறைசாற்றிக் கொள்ளும் தமிழக அரசு, மாணவர்களுக்கு நேரும் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 29, 2024 22:55

ராமர் கோவில் திறந்த இந்நேரத்திலாவது, நல்லவர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வரவேண்டும்.... மோடி +அமித்ஷா காம்பினெஷன்..?? ராமர் + லஷ்மணர்..?? ஆகிவிடுமா


D.Ambujavalli
ஜன 29, 2024 06:47

Oor. Makkal. Palarum. Upayokikkum. Kudineer. Thottiyil. Asuththam. Kalantha. Vazhakke. Thoonkukirathu Intha Pirasnaiyai. Yaar. Paarppaarkal?