என்.நெல்சன், முட்டத்தில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று
பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியல் நிர்ணய சட்டங்கள் அனைத்தையும்
மாற்றி விடுவர்' என, 'இண்டியா' கூட்டணியினர் கூப்பாடு போட்டனர்.உண்மையில் அரசியல் நிர்ணய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சுத்தமாக, மொத்தமாக மாற்ற வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.இப்படி
சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும், அதிசயமாகவும்
தோன்றலாம். ஆனால், உண்மையை வெகு காலம் மறைத்துக் கொண்டிருக்க முடியாது. 'பயங்கரவாதத்துக்கு
நிதியுதவி அளித்ததாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொறியாளர் ரஷீத்,
பாரமுல்லா லோக்சபா எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளார். மக்களின் தீர்ப்பை
ஏற்று, அவரை மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்' என, மக்கள் ஜனநாயக கட்சி
தலைவி மெஹபூபா முப்தி கூறிக் கொண்டிருக்கிறார். முன்னாள் மத்திய
அமைச்சர் முப்தி முஹமது சையத்தின் மகளான இவர், ஒரு சமயம், ஜம்மு- -
காஷ்மீரின் முதல்வராகவும் கோலோச்சியவர். தற்போது நடைபெற்ற லோக்சபா
தேர்தலில் இவர், 2.42 லட்சம் வாக்குகள் பெற்று தோற்றுப் போனவர்.பா.ஜ.,வுக்கு தற்போது, 400 ஓட்டுகள் கிடைக்காமல் போனதற்கு, 'பேஸ்புக்'கில் ஒரு பதிவு தென்படுகிறது.'பா.ஜ.,
செய்த முப்பெரும் தவறுகள்' என சுட்டிக் காட்டப்பட்டுள்ள அந்த பதிவில்,
'இந்தியாவை ஹிந்து தேசமாக பிரகடனம் செய்யாதது, இலவச வாக்குறுதிகளை
சட்டங்கள் வாயிலாக தடை செய்யாதது, ஊழல்வாதிகளிடம் கடுமை காட்டாதது' என,
எழுதப்பட்டுள்ளது.'இண்டியா' கூட்டணி கொடுத்துள்ள, 'டுபாக்கூர்'
வாக்குறுதிகள் விஷயத்தில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது,
டி.டி.வி. தினகரன், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, வாக்குகளை சேகரித்தது போல,
'மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு
ஆண்டுதோறும் தலா 1 லட்சம் ரூபாய் தருவோம்' என, காங்., ராகுல், உ.பி., யில்
துண்டுச் சீட்டு கொடுத்திருக்கிறார்.தேர்தல்களின் போது, அரசியல்
கட்சிகள், நிறைவேற்ற முடியாத எந்த டுபாக்கூர் வாக்குறுதிகளை வழங்கினாலும்,
அதை தேர்தல் கமிஷனால் தடை செய்ய இயலாது.மசூதிகளிலும்,
சர்ச்சுகளிலும், 'இந்த அரசியல் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்று பிரசாரம்
செய்யலாம். ஆனால், ஹிந்து கோவில்களில் செய்யக்கூடாது; காரணம், இது
மதச்சார்பற்ற நாடு.சிறையில் இருக்கும் விசாரணை கைதியோ, தண்டனைக் கைதியோ, தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால், போட்டியிடலாம்; வெற்றியும் பெறலாம்.பாரமுல்லா
லோக்சபா தொகுதியில் அது தானே நடந்து இருக்கிறது. ஒரு ரூபாய் திருடினாலும்
திருடன் தான்; ஒரு கோடி ரூபாய் திருடினாலும் திருடன் தான்.அது என்ன
மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டும் தான் தேர்தலில்
போட்டியிட தடை? இரண்டு ஆண்டுகளும் 11 மாதங்களும் வரை தண்டனை பெற்று
குற்றவாளிகள் அனைவரும், குற்றமே செய்யாதவர்களா?நாடு சுதந்திரம்
அடைந்த போது, தற்போதுள்ள இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள்,
எதிர்காலத்தில் இந்த நாடு, அயோக்கியர்களின் அரவணைப்பில் சிக்கும் என்று
சிந்திக்கவே இல்லை; அதனால், பல்வேறு விதமான சலுகைகளுடன், அந்த இந்திய
அரசியல் சட்டத்தை உருவாக்கி விட்டனர்.இனிமேலும் இதே சட்டங்களும்,
சம்பிரதாயங்களும் நீடித்தால், ரஜினி சொன்னது மாதிரி, இந்த இந்திய நாட்டை,
அந்த ஆண்டவனால் கூட காபந்து பண்ண முடியாது.எந்தவொரு சட்டத்தையும்,
50 ஆண்டு களுக்கு ஒருமுறை திருத்தி அமைக்க வேண்டும் என்பது உலக அறிவாளிகளான
சாணக்கியன் மற்றும் சாக்ரடீஸின் அறிவுரை.அந்த அறிவுரையை பின்பற்றி, இந்த நாட்டின் மொத்த சட்டங்களையும் திருத்தி அமைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு! அடுத்த தேர்தலுக்குள் சுதாரிப்பரா?
ஆர்.உதய் பாஸ்கர், வழக்கறிஞர், சென்னையில் இருந்து எழுதுகிறார்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மீண்டும் தன் ஜனநாயக சக்தியை, லோக்சபா தேர்தல் வாயிலாக நிரூபித்துள்ளது. மோடி, இந்தியா முழுதும் 206 ஊர்வலங்களில் உரையாற்றினார். வீதிக்கு வீதி ஊர்வலமாக சென்றார். 80 நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரசாரம் செய்தார். ஆனால், வட மாநில கிராமங்களிலும், விவசாயிகள் மத்தியிலும் செல்வாக்கு குறைந்துள்ளது. காரணம் விவசாயிகளின் பிரச்னைகளை மோடி சரியான முறையில் கையாளாததே.எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி., சீட்டுகளில், காங்கிரஸ் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது; பா.ஜ., வெற்றி குறைந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றுள்ளது. அவர் எப்போதும் தரமான ஆட்சி தரக்கூடிய பழுத்த அரசியல்வாதி. தெலுங்கானாவில் பா.ஜ., வெற்றி பெற்றது சிறப்பு. ஏனெனில், தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகளின் மறைமுக செல்வாக்கு அதிகம். மோடி இதர பிற்படுத்தப் பட்டோர் நலனில், போதிய அக்கறை செலுத்தவில்லை. இதனால் காங்., - யாதவ் வெற்றியில் ஓ.பி.சி., சமூகம் அதிக பங்காற்றியுள்ளது. மோடி, ஓ.பி.சி., சமூகத்தினரை இனியாவது முன்னேற்றலாம். இந்தியா முழுதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தலித்துகள் என்ற பெயரில் எஸ்.சி., - எஸ்.டி.,வாக்குகளை கவர மேலும் தலித் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கின்றனர்; ஆனால், ஓ.பி.சி., மக்களை முன்னேற்றுவதில்லை. நம் நாட்டு ஜாதிய கட்டுமானத்தில், தலித் எழுச்சி, தலித் அல்லாதவர்களை பழி வாங்குவதாக அமைந்து விடுகிறது. தமிழகம் மிக மோசம்; ஓ.பி.சி., மக்களை இரண்டாம் தரமாக்குவதே, தி.மு.க., அரசியல். அ.தி.மு.க., பலவீனப்படுத்தப்பட்ட நிலையில், பலமான அரசியல் கூட்டணியை உறுதி செய்து கொண்ட, தி.மு.க., பெற்ற வெற்றி, அரசியல் கணக்கில் சாதாரண வெற்றியே.தமிழகத்தில் அ.தி.மு.க., 32 இடங்களில் போட்டியிட்டதில், 20.46 சதவீத வாக்குகளை பெற்று உள்ளது. அ.தி.மு.க., அடிமட்ட அரசியலில் தொண்டர்களை அதிகம் இழந்துள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க., கடைநிலையில், தேர்தல் பணியே நடைபெறவில்லை. உண்மையான அ.தி.மு.க., பலமடைய வேண்டும் எனில், பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.தென் மாநிலங்களில் பா.ஜ., மிதமான வெற்றியை பெற்றுள்ளது; ஒரிசா வில் பயணம் துவங்கிஉள்ளது. அருணாசலில் பா.ஜ., வெற்றி பெற்றது, சீனாவுக்கு தலைவலி தான்.இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறப்பானது. இன்னமும் ஐந்து ஆண்டுகளுக்கு, உலக அரங்கில் நம் நாடு பலமடைந்து முன்னேறும். மாநில காங்கிரஸ் கட்சியினர், தேசிய காங்கிரசுக்கு, அரசியல் அடிப்படைகளிலும், நடவடிக்கைகளிலும் எதிரான வர்கள். இந்த பிராந்திய கிளைகள், ராகுலை பலவீனப்படுத்த முயல்வரே தவிர, பலப்படுத்த மாட்டார்கள்.சறுக்கிய அனைவரும், அடுத்த தேர்தலுக்குள் சுதாரித்து நின்றால் நல்லது!