உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பதில் எங்கே மிஸ்டர் ஸ்டாலின்?

பதில் எங்கே மிஸ்டர் ஸ்டாலின்?

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'சொன்னதைச் செய்யும் நம் முதல்வர்' கீழே உள்ளவற்றைச் செய்தாரா? தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மது தான் காரணம். எனவே, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று, 2016லேயே கூறினார். செய்தாரா? 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். ஆச்சா? 'சம வேலைக்கு சம ஊதியம்' என, இடைநிலை ஆசிரியர்களுக்கு வாக்கு கொடுத்தார். நடந்ததா? பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று கூறினார். அமல்படுத்தினாரா? அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம், 1000 ரூபாய் என்றார். எல்லாருக்குமா கொடுக்கின்றனர்? 'விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும். ஒரு டன் கரும்புக்கு ஆதார விலையாக 4,000 ரூபாய் வழங்கப்படும்' என்றார். செய்தாரா?பதில் எங்கே, மிஸ்டர் ஸ்டாலின்?

கமலுக்கு மக்களை சந்திக்க பயமா?

எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எம்.ஜி.ஆருக்கு பின், தி.மு.க.,வை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் வைகோ, மற்றொருவர் கமல். இருவரும் தி.மு.க.,வையும், ஸ்டாலினையும் எதிர்த்து பொங்கினர். இப்போது, பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டனர்.இந்தியன் படத்தில் கமலை, நடிகர் கவுண்டமணி, 'இங்க சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான்... அவனை எங்க காணோம்'னு காமெடி பண்ணுவார். இப்போது கமலை பார்க்கும் போது, இந்த வசனம் தான்தற்போது நினைவிற்கு வருகிறது.'டார்ச் லைட்' கொண்டு இலவச, 'டிவி'யை உடைத்துவிட்டு குடும்ப ஆட்சிக்கா உங்கள் ஓட்டு என்ற கமல் எங்கே... எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று சபதம் செய்த கமல் எங்கே...?இன்று எல்லாவற்றையும் மறந்து அடங்கி, ஒடுங்கி, 'தி.மு.க., கூட்டணிக்கு, எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது, பதவிக்கான விஷயமல்ல; நாட்டுக்கான விஷயம். எனவே, எங்கு கை குலுக்க வேண்டுமோ, அங்கு கை குலுக்கியுள்ளேன்' என்று பேசும் கமல் எங்கே...?நீங்கள் பதவிக்காக கை குலுக்கவில்லை என்றால், லோக்சபா தேர்தலில் இரண்டு சீட் கேட்டு அறிவாலயம் சென்றது ஏன்? ஒரு ராஜ்யசபா சீட் தருகிறேன் என்றதும் அதற்கு சம்மதித்து, முன்பு ஊழல் கட்சி என்று கூறிய தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டது ஏன்? மக்களை சந்திக்க பயமா? 

கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -----------------------------மக்கள் தொகை பெருக பெருக, தொழில் வளர்ச்சியும் தேவை தான். அதே நேரம், அதிகரித்த மக்கள் தொகைக்கு உணவும் அவசியம். விவசாயத்தில் சம்பாதிப்பதை விட ரியல் எஸ்டேட்டில் நிலத்தை விற்று, பட்டணத்தில் குடியேறி பணத்தை வங்கியில் டிபாசிட் செய்தால், அலுங்காமல் வட்டி வரும் என்று, விவசாயிகளை மூளைச்சலவை செய்கின்றனர்.இதனால், சோறு போடும் நிலத்தை விற்றுவிட்டு, நகரங்களில் குடியேறி பல விவசாயிகள் செக்யூரிட்டியாக பணிபுரியும் அவலம் நடக்கிறது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேல்மா தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 2,700 ஏக்கர் விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதை ஆட்சேபித்து, 11 கிராமங்களை சேர்ந்த மக்கள், 200 நாட்களுக்கும் மேலாக போராடுகின்றனர்.தொழிற்பேட்டைகள் அவசியம் தான். அதற்காக, விளைநிலங்களை அழித்து, அவற்றை உருவாக்க வேண்டியது அவசியமா? எத்தனையோ லட்சம் தரிசு நிலங்கள் கிடக்கின்றன. அவற்றில் தொழிற்பேட்டைகள் அமைக்க அரசு முயற்சி எடுக்கலாம்.அதில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கும் அடிப்படை தேவை உணவு தானே. நட்டு, போல்டு போன்றவற்றை உற்பத்தி செய்து சாப்பிட முடியுமா? விளைநிலங்களை அழித்து தொழிற்பேட்டைகள் அமைப்பது, கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஈடானது.அரசியல்வாதி மகன் அரசியல்வாதி; டாக்டர், வக்கீலின் வாரிசுகள் அதே தொழிலுக்கு வருகின்றனர். ஆனால், விவசாயி மகன் விவசாயத்தை கவனிக்க முன்வருவதில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.விவசாயிகளுக்கு, சாகுபடிக்கு தகுந்த ஊக்கத்தொகை வழங்க வேணடும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு இணையாக உணவு உற்பத்தியும் பெருக வேண்டும். பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சமமாக, வேளாண் துறைக்கும் நிதி ஒதுக்க வேண்டும்.இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். இல்லையேல், பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வது போல, உணவு தானியங்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம்!

உலகின் விஸ்வகுரு நரேந்திர மோடி!

நா.பெருமாள், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:நம் கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேர், மேற்காசிய நாடான கத்தாரில், கப்பல் திட்டம் தொடர்பான ரகசியங்களை, இஸ்ரேல் நாட்டுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டி, 2023 அக்டோபரில், தோஹா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.நம் பிரதமர் மோடி, இந்த எட்டு பேரையும் மீட்ட விதம் உலகையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.சர்வதேச அளவில் பிரச்னையை எடுத்துச் செல்லாமல், உடனடியாக எதிர்வினை ஆற்றாமல், மிகவும் கவனமாகவும், நிதானமாகவும், இருதரப்பு பேச்சுகள் வாயிலாகவே, தான் நினைத்ததை சாதித்துள்ளார்.ஆரம்பத்தில், வெளியுறவுத் துறை வாயிலாக முயற்சிகளை மேற்கொண்ட மோடி, கத்தார் அரசர் அமீர் ஷேக் தமீம் பின் அமது அல்தானியை நேரில் சந்தித்து, அமைதி பேச்சு வாயிலாக, எட்டு இந்தியர்களின் உயிரையும் மூன்றே மாதங்களில் காப்பாற்றியுள்ளார்.உலகில் உள்ள பல அரசியல் தலைவர்களிடம் இன்று காணப்படும் அகங்காரம், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, அன்பால் எதையும் சாதிக்கலாம் என்ற நேர்மறை சிந்தனையை விதைத்த மோடி, உலகின் விஸ்வ குருவாக ஒருநாள் வலம் வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை