உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தார் சாலைகளுக்கு தரச்சான்று வாங்குவீரா?

தார் சாலைகளுக்கு தரச்சான்று வாங்குவீரா?

தார் சாலைகளுக்கு தரச்சான்று வாங்குவீரா?குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உணவு தரம் மற்றும் சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்க, இடியாப்பம், வடகறியை தெருத்தெருவாக கூவி விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழும் ஏழைகள், இனி, இணையதளத்தில் பதிவு செய்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டுமாம்!ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு வழங்கும் பொருட்கள் எல்லாம், 'அக்மார்க்' தர முத்திரையிடப்பட்டுதான் வருகிறது போலும்!தமிழகமெங்கும் போடப்படும் சாலைகள், ஒரு சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாகி வாகனங்களில் செல்வோரின் இடுப்பையும், பலரின் உயிரையும் காவு வாங்குகிறதே... இந்த சாலைகளுக்கு எவரிடம் இருந்து, தரக் கட்டுப்பாடு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது?தமிழக அரசின் பணம் காய்ச்சி மரமாக திகழும் டாஸ்மாக் கடைகள் மற்றும் 'பார்'கள் எல்லாம் தரச்சான்றிதழ் பெறப்பட்டு தான் நடத்தப்படுகின்றனவா?ஏழைகள் விற்கும் இடியாப்பத்திற்கு தரத்தை எதிர்பார்க்கும் அரசு, தங்கள் ஆட்சியிலும் கொஞ்சம் தரத்தை காட்டலாமே!கருணாநிதிக்கா... பாரத ரத்னா விருதா...? கே.மணிவண்ணன், சூலுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், 'தமிழகத்தில் பல சாதனைகளை செய்து மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என்று திருவாய் மலர்ந்துள்ளார். அப்படியே கருணாநிதியின் எந்த சாதனைக்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தால், அவரை பாராட்டலாம். l கடந்த 1974ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திராவின் மிரட்டலுக்கு பயந்து, கச்ச தீவை தாரைவார்க்க துணை போனதற்காகவா? l கர்நாடகா மாநிலம் காவேரியின் குறுக்கே ஹாரங்கி, கபினி அணை கட்டியபோது, பிரதமர் இந்திராவின் மிரட்டலுக்கு பயந்து, வாய்மூடி மவுனமாக இருந்து, தமிழக டெல்டா விவசாயிகளை இன்றுவரை தண்ணீருக்கு கையேந்த வைத்ததற்காகவா? l கடந்த 1924ல் போடப்பட்ட காவிரி ஒப்பந்தம், 1974-ல் காலாவதியானபோது, அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, ஒப்பந்தத்தை புதுப்பிக்க விதி இருந்தும் புதுப்பிக்காமல் விட்டுவிட்டு டெல்டா விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்ததற்காகவா? l தன்னைத் தானே, 'தமிழின தலைவர்' என்று கூறிக் கொண்டு, ஐந்து முறை முதல்வராக இருந்தும், தமிழுக்கென்று ஒரு பல்கலை கூட அமைக்காமல் இருந்ததற்காகவா? l தன் குடும்ப உறுப்பினர்களை ஹிந்தி படிக்க அனுமதித்து, தமிழக மக்கள் ஹிந்தி கற்பதை தடுக்க, ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து சாதனை செய்ததற்காகவா? l கடந்த 2009ல் இலங்கையில் போர் நடந்தபோது, மத்திய அரசை கவிழ்க்கும் ஆயுதம் கையில் இருந்தும், வளம்கொழிக்கும் பதவிக்காக, ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்ததற் காகவா? l இலங்கையில், தமிழர்கள் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கையில், மெரினா பீச்சில் இரண்டு குளிர்சாதன பெட்டி, மனைவி, துணைவியுடன் காலை உணவை முடித்து, மதிய உணவிற்கு முன் உண்ணாவிரதம் இருந்த ஒப்பற்ற தியாகத்திற்காகவா? எதற்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்பதை, தமிழச்சி தெளிவுபடுத்துவாரா? மறைமுக ஊழல் திட்டமோ இது? எஸ்.செபஸ்டின், சிவகாசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், மக்களின் வரிப்பணத்தை எடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதம், 1,000 ரூபாயை பெண்களுக்கு கொடுத்து வருகிறது, தி.மு.க., அரசு. இதில் பல வரைமுறைகள் நிர்ணயித்துள்ளதாக கூறுகின்றனர். அதேநேரம், தங்கள் கட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினர், அவர்களது உறவினர்கள் என்றால், எந்த வரைமுறையும் இல்லாமல், கார், பங்களா வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கின்றனர். ஆனால், மற்றவர்களுக்கு ஏகப்பட்ட கெடு பிடிகள் செய்கின்றனர். உதாரணத்திற்கு, என் வீட்டின் அருகில் வசிக்கும் முதியவர்கள் இருவர், தங்கள் ஒரே மகளை திருமணம் முடித்துக்கொடுத்து, அப்பெண்ணிடம் இருந்து எவ்வித உதவியும் இல்லாததால், தாங்கள் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு, அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றை வருமானத்தைத் தவிர, ஓய்வூதியமோ, முதியோர் உதவித் தொகையோ எதுவுமே அவர்கள் வாங்கவில்லை. அவ்வீட்டு முதிய பெண்மணி, மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது கணவர் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க இயலாத நிலையில் இருந்த போது, மருத்துவமனைக்கு சென்று வர ஒரு பழைய கார் வைத்திருந்தார். தற்போது, கார் இல்லை என்றாலும், அதையே காரணம் காட்டி, உரிமைத் தொகை வழங்க மறுத்து விட்டனர். அவரிடம் கார் இல்லை என்பதற்கான ஆதாரத்தை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து வாங்கி கொடுத்தும், அப்பெண்ணுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது எனும் போது, இதை எப்படி ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டமாக ஏற்க முடியும்? தி.மு.க.,விற்கு ஓட்டுப் போடுவோருக்கும், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும், கட்சி பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக, மக்களின் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்கிறது, தி.மு.க., அரசு. அவ்வகையில், ஆட்சியாளர்கள் தங்கள் மறைமுக ஊழலுக்கு கொடுத்துள்ள பெயரே, மகளிர் உரிமை திட்டம் என்றால்னா அது மிகையில்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை