தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:பா.ஜ.,
அரசின் மேலும் ஒரு சாதனை... ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதில்,
2023 முதல், 11 மாதங்களில் மட்டும், 67,000 கோடி ரூபாய் சேமித்ததோடு,
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை வெகுவாக குறைத்துள்ளது, மத்திய
அரசு. ஆனால், இது குறித்து எதிர்க்கட்சிகள் பேசாது. அவர்களை பொறுத்தவரை,
லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் ஈடுபட முடியுமா என்பதே சிந்தனை. 'அரசு பணத்தை எல்லாம் மிச்சப்படுத்தி, தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்துறாங்க'ன்னு, எதிர்க்கட்சிகள் அவங்களுக்குள் பேசிக்குவாங்களோ?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: கோடை வெயில் தாக்கத்தால் வன பகுதிகளிலும், சரணாலயங்களிலும் பறவைகள், வன விலங்குகள், உணவு மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. வனப்பகுதி ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகள் வறண்டு இருப்பதாலும், குடிநீர் தொட்டிகளை வனத்துறை முறையாக பராமரிக்காத காரணத்தாலும், போதுமான தண்ணீர் இல்லை. அதில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.வனத்துறை அனுமதி கொடுத்தால், அ.ம.மு.க.,வினரை வைத்து, வனத்திற்குள் நீர்மோர் பந்தல் திறந்திடுவார் போல!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: பல ஆண்டுகளாக போராடி பெற்ற, 'ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை' என்ற உரிமைக்கு எதிராக, ஒரு நாளைக்கு, 12 மணி நேர வேலை கட்டாயம் என்ற சட்டத்தை, என்றைக்கு கொண்டு வந்தனரோ, அன்றைக்கே தொழிலாளர் தினமான, மே தினத்தை கொண்டாடும் தகுதியை, தி.மு.க., இழந்து விட்டது. நல்ல வேளை, பல தரப்பினரின் எதிர்ப்பால், அச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை; கவர்னரும் அதற்கு ஒப்புதல் தரவில்லை.நம் நாட்டில், 12 மணி நேர வேலை கட்டாயமில்லை என்றாலும், தமிழகத்தில் பல வேலைகள், தொழிற்சாலைகள், 12 மணி நேரம் வேலை வாங்குவது இவங்களுக்கு தெரியாதா?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: இளையராஜா தனது மெட்டுக்கான பாடல் வரிகளை, அவரே எழுதிக் கொள்ள வேண்டும். வைரமுத்து அவரது பாடல் வரிகளுக்கான இசை கோர்ப்பை அவரே மேற்கொள்ள வேண்டும். இது நடக்கும் போது தான் மொழி பெரியது என அவரும், இசையே பெரியது என இவரும் என்கிற ஞான செருக்கை கடந்த புரிதலுக்கு இருவரும் வர முடியும்.அதிசயமா இருக்கு... எப்பவுமே பழனிசாமியை கண்டித்து தானே அறிக்கை தருவார்... அவருக்கு ஒரு நாள் ரெஸ்ட்டா இல்ல, போர் அடிச்சிடுச்சா?