முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி : தமிழக காங்கிரசுக்கு, தற்போது தலைவர் என்று யாரும் இல்லை. தங்கபாலு, முன்னாள் தலைவர் தான். புதிய தலைவர் பெயரை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும்.
பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேச்சு : நாட்டில் தலைவிரித்தாடும் பல ஊழலுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே பொறுப்பு. இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியவே, மக்கள் விரும்புகின்றனர். இந்த ஊழல் அனைத்திற்கும், அரசே பொறுப்பு என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர்.
மா.கம்யூ., எம்.பி., பிருந்தா கராத் பேட்டி : லோக்பால் மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், அதற்காக போராடக் கூடாது என கூறுவது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த போதும், மாநிலங்களில் எதிர்க்கட்சியாக உள்ள நிலையிலும், சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தியதை அக்கட்சி மறந்துவிட்டது.
பேராசிரியர் அப்துல் காதர் பேச்சு : உலகத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என விரும்பியவன் தமிழன். எதையுமே அன்னியப்படுத்தி பார்க்காமல், கண்ணியப்படுத்திப் பார்ப்பவர்கள் தமிழர்கள் மட்டுமே.
ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி பேச்சு : உலகில் வசிக்கும் மக்களைப் பற்றி, லண்டனில் உள்ள ஹார்டுவேர் பல்கலைக்கழகம் வகைப்படுத்தியுள்ளது. இதன்படி, மொத்த மக்கள் தொகையில், 75 சதவீதம் பேர், உலகில் என்ன மாற்றங்கள் நடக்கின்றன என்பது தெரியாமலேயே, வாழ்க்கையை நகர்த்துகின்றனர். 20 சதவீதம் பேர், மாற்றங்களுக்கு ஏற்ப, தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். 5 சதவீதம் பேர் தான், மற்றவர்களைப் பற்றி சிந்தித்து, மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்களால் தான், உலகம் இன்னும் இயங்குகிறது.
இ.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு பேட்டி : லோக்பால் சட்டம் குறித்த முன்வடிவு, 1969ல் கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த, 41 ஆண்டுகளாக, இது கிடப்பில் போட்டப்பட்டது. பிரதமரும் ஒரு எம்.பி., என்பதால், லோக்பால் சட்ட வரம்பிற்குள், அவரையும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். லஞ்ச, ஊழலால், பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் எடுத்துள்ள ஊழலைத் தடுக்க, மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை.