ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: பாலாற்றின் குறுக்கே தேவைப்படும் இடங்களில், தடுப்பணைகள் கட்ட வேண்டும். பருவ மழை பெய்திடும் காலங்களில், மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தேக்கி வைத்து, நிலத்தடி நீரைச் சேமிக்கலாம். இதன் மூலம், நீர் ஆதாரத்தைப் பெருக்க முடியும்; விவசாயம் செழிக்கும். நீர் தேங்கினால், மணல் பரப்பு சேமிப்பாகும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பொதுப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், மெட்ரிக் கல்வி வாரியமும், ஆங்கிலோ இந்தியன் கல்வியும் தொடர்கிறது. இந்த கல்வி வாரியத்தை கலைக்க வேண்டும். பேராசிரியர் முத்துக்குமரன் குழு அளித்த பரிந்துரையில் சமச்சீர் கல்வி என்றால், பாடம் கற்பித்தல், மதிப்பிடுதல், தேர்வு முறை, பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை அனைத்தும் ஒரே சீராக, தரமாக அமைய வேண்டும்.
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து அறிக்கை : சி.பி.எஸ்.இ., படிப்பவர்களுக்கு, இந்த சமச்சீர் கல்விச் சட்டம் பொருந்தாது என, மாணவர்கள் தெரிந்து கொண்டுள்ள நிலையில், வருங்காலத்தில் மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அதிகமாக சேரும் நிலை ஏற்படும். எனவே, அனைவரும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட நிலைக்கு வந்தால், தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்பது பெயரளவிற்குத் தான் இருக்க முடியும். இதை, தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷே, அதிகாரப்பகிர்வு தேவையில்லை என கூறியிருக்கிறார். இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ், ராஜபக்ஷேவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளுக்கு மாறாக தற்போது இலங்கை ராணுவ அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேட்டி: கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், ஒரு மாற்றம் எதிர்பார்த்த நடுநிலை வாக்காளர்கள், தே.மு.தி.க.,விற்கு ஓட்டளித்தனர். இப்போது, சாயம் வெளுத்துவிட்டது. அவர்கள் ஓட்டு வங்கி குறைந்து கொண்டே போகிறது. தனி நபர் ஒழுக்கம், தலைமைப் பண்பு இல்லாத தலைமை, கட்சியில் குடும்ப ஆதிக்கம் என பல குளறுபடிகள். இனி, தே.மு.தி.க.,விற்கு வளர்ச்சி கிடையாது.