தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை: துாத்துக்குடி
மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில், 'இஸ்ரோ'வின் ஏவுதளம் அமைக்கப்பட்டு,
அப்பகுதியில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா
அமைக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பது, தென் மாவட்டங்களின்
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும்.மத்திய அரசு அமைக்க உள்ள, 'இஸ்ரோ'வின் ஏவுதளத்தை, மாநில அரசு அமைப்பது போல, 'பில்டப்' தருவது ஏன்? முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: உலக பேரழிவை உருவாக்கிய கொரோனா தொற்று; அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சமாளித்து, வெளிநாடுகள் மத்தியில், பாரத தேசத்தின் மதிப்பை துாக்கி நிறுத்தி, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை நொறுக்கி, ஊழலற்ற நிர்வாகம் என நிறைவுகளையும், நிம்மதியையும் நாட்டுக்கு தந்திருக்கும் பிரதமர் மோடிக்கு, 2024ல் மூனறாவது முறை வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு இந்தியனும் உளமாற நன்றி செலுத்த வேண்டும்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இவருக்கும், 'சீட்' உறுதியாகிடுச்சோ?அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: திரைப்பட துறையில் உள்ள பெண்கள் மீது, தொடர்ச்சியாக பல்வேறு விதமான தாக்குதல்கள் வருவதற்கு காரணம், கவர்ச்சி என்ற பெயரில் காட்டும் உச்சகட்டமான ஆபாசமே ஆகும். பெண்களின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உடல் அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் நிலை மாற வேண்டும். பெண்கள் மாறினோலே, மாற்றம் நிகழும்.வாஸ்தவம் தான்... ஆனா, இதை திரையுலகம் ஏற்றுக்கொள்ளுமா என தெரியலையே!அகில இந்திய காங்., செயலர்விஸ்வநாதன் அறிக்கை: ஜனநாயகத்தை போற்றக் கூடியவரும், தியாகத்தின் மறு உருவமுமான சோனியா, ராஜ்யசபாவிற்கு, ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்து தரப்பு மக்களின் உயர்வுக்காகவும் லோக்சபாவில் ஐந்து முறை எம்.பி., பதவி வகித்து குரல் கொடுத்தவர். தன்னை தேடி வந்த பிரதமர் பதவியை தியாகம் செய்த சோனியா, முதன் முறையாக, ராஜ்யசபாவுக்கு வருகிறார். அங்கு, அவரது குரல் ஜனநாயகத்தை தழைக்கச் செய்யும்.டில்லியில அரசு பங்களாவான, 10, ஜன்பத் இல்லத்தை தியாகம்செய்ய மனமில்லாம தான், அவங்க ராஜ்யசபாவுக்குள்ள போறதா சொல்றாங்களே!