மறைந்திருந்து, இலக்குகளை துல்லியமாக துப்பாக்கியால் சுடும் பயிற்சி பெற்று உள்ள, இந்திய எல்லை காவல் படையின் முதல் பெண், 'ஸ்னைப்பர்' சுமன் குமாரி:ஹிமாச்சல பிரதேசத்தின் மன்டி மாவட்டத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். அப்பா, எலக்ட்ரீஷியன். அம்மா இல்லத்தரசி. 'ஸ்னைப்பர்' என்பவர், துப்பாக்கி பயன்படுத்தும் ராணுவம், பாரா மிலிட்டரி, காவல் துறை வீரர் ஆவார். மறைந்திருந்து, இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் துப்பாக்கிச்சூடு பயிற்சி பெற்றவர் தான், 'ஸ்னைப்பர்'. தாக்கப்படும் இலக்குகளில் பார்வைத் திறனுக்கும் அப்பாலிருந்து செயல்படுவது ஸ்னைப்பரின் சிறப்பு.ஸ்னைப்பிங் துப்பாக்கிகளில், 'டெலஸ்கோப்'பும் இணைக்கப்பட்டிருப்பதால், தொலைதுாரத்தில் இருந்து இலக்குகளை குறிப்பிட்ட புள்ளியில் துல்லியமாக தாக்க முடியும்.நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தால், 2021ல், எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்தேன். இதில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வரும் நான், ஸ்னைப்பர் வீராங்கனையாக வேண்டும் என்ற விருப்பத்தை மேலதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்களும் என் உறுதியைக் கண்டு, அப்பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி அளித்தனர். ஸ்னைப்பர் பயிற்சி பிரிவில் பங்கேற்ற 57 பேரில், நான் மட்டுமே பெண்.இந்தோரில், மிகக்கடினமான எட்டு வார ஸ்னைப்பர் பயிற்சியை சமீபத்தில் முடித்து, 'பி.எஸ்.எப்., அமைப்பின் முதல் பெண் ஸ்னைப்பர்' என்ற பெருமையை பெற்றேன். 'கமாண்டோ' பயிற்சிக்கு அடுத்தபடியாக மிகவும் கடினமானது இந்த ஸ்னைப்பர் பயிற்சி. மனம் மற்றும் உடல் வலிமை மிக அதிகளவில் தேவைப்படும் பயிற்சி இது.சூழ்நிலைக்குத் தக்கவாறு தம்மை மறைத்து, எதிரிக்கு மிக அருகில் நெருங்கி, எதிரிக்கு தெரியாதவாறு தாக்குதல் நடத்தவும் நேரிடும்.'அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் பங்கேற்கும் படையாக, எல்லை காவல் படை உருவாகி வருகிறது.'இதன் ஓர் அங்கமாக கடுமையான பயிற்சிக்கு பின் எல்லை காவல் படையில் முதல் பெண் ஸ்னைப்பர் தோன்றி யிருக்கிறார்' என்ற செய்திக்குறிப்பை எல்லை காவல் படை வெளியிட்டிருக்கிறது.என் துணிச்சல் மிக்க இந்த முடிவு, இதர பெண் வீராங்கனையர் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள உத்வேகம் அளித்துஇருக்கிறது. 28 வயது இளம்பெண்ணான என் சாதனைகள், பல பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், 'தங்களாலும் சாதிக்க முடியும்' என்ற மன உறுதியையும் அளித்திருக்கின்றன.