உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 2 ஏக்கர் நிலத்தில் 1,200 கிலோ உளுந்து மகசூல்!

2 ஏக்கர் நிலத்தில் 1,200 கிலோ உளுந்து மகசூல்!

இயற்கை விவசாயத்தில் உளுந்து சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்துள்ள, தஞ்சை மாவட்டம், அருமலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.சி.ஏ., பட்டதாரியான ராஜேஷ்:அப்பா கடுமையான உழைப்பாளி. 'எல்லா தொழிலிலும் சாதக, பாதகங்கள் இருக்கத் தான் செய்யும். அது மாதிரி தான் விவசாயமும். காலம் காலமாக இதுதான் நம்மை வாழ வைக்குது'ன்னு சொல்வார். இதனால், எம்.சி.ஏ., முடித்து விட்டு, முழு நேரமாக விவசாயத்தில் இறங்கி விட்டேன்.விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது ரொம்பவே சிரமமா இருக்கு; இதனால், கடும் நெருக்கடிகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். விவசாயத்துக்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் விலைக்கு வாங்கி, குறைந்த வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்பது லட்சியம். முதல் கட்டமாக வைக்கோல் கட்டும் இயந்திரமும், டிராக்டரும் வாங்கி வாடகைக்கு விட்டுட்டு இருக்கேன். அடுத்ததாக நடவு இயந்திரமும், அறுவடை இயந்திரமும் வாங்கும் ஏற்பாடுகளில் இறங்கி இருக்கிறேன். ஆந்திர மாநில விவசாயிகள் மிகவும் விரும்பி சாகுபடி செய்யக்கூடிய ரகமான, எல்.பி.ஜி., 932 ரக உளுந்தை கிலோ 150 ரூபாய் என விலை கொடுத்து, 10 கிலோ விதை உளுந்து வாங்கினேன்.முதல் ஆண்டு மார்கழி பட்டத்தில், 1 ஏக்கரில் இதை பயிரிட்டேன். 'நம் ஊர் தட்பவெப்ப நிலைக்கு இது நல்லா விளைய வாய்ப்பே இல்லை. இது தேவையில்லாத வேலை' என, எங்கள் பகுதி விவசாயிகள் பலர் கூறினர். ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது.விதைப்பு செய்ததில் இருந்து 95ம் நாள் காய்கள் முற்றி, உளுந்து அறுவடைக்கு வந்தது. செடிகளை கைகளால் அறுவடை செய்து, அதை மிஷினில் கொடுத்து தனியா பிரித்தெடுத்தேன்.மிஷினை பயன்படுத்தியதால் சிறிது கூட துாசி இல்லாமல் உளுந்து சுத்தமாக கிடைத்தது. 2 ஏக்கரில் விளைந்த 12 குவின்டால், அதாவது 1,200 கிலோ உளுந்தை பிரித்தெடுக்க, அதிகபட்சம் மூன்று மணி நேரம் தான் செலவானது. மிஷினுக்கு 5,000 ரூபாய் வாடகை கொடுத்தேன். மிஷின் பயன்படுத்தியதால், எனக்கு வேலை மிகவும் எளிதானது.எல்.பி.ஜி - 932 ரக உளுந்தில் மொத்தம், 1,200 கிலோ மகசூல் கிடைத்திருக்கிறது. ரசாயன விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து, கிலோவுக்கு, 100 ரூபாய் வரை விலை கிடைச்சுட்டு இருக்கு. இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படுற உளுந்துக்கு, 110 - 120 ரூபாய் விலை கிடைக்குது.இப்ப நான் உற்பத்தி செய்துள்ள 1,200 கிலோ உளுந்து விற்பனை வாயிலாக, குறைந்தபட்சம் 1 லட்சத்து 32,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இது எல்லா செலவுகளும் போக, 92,600 ரூபாய் லாபம் கிடைக்கும்.தொடர்புக்கு :99944 18929.******************

ஒரு நாள் கூட பாடாமல் இருக்க முடிவதில்லை!

மயிலாடுதுறையில் பெரிய கோவில் எனப்படும், அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் கோவிலின் நான்கு பெரிய வீதிகளை சுத்தம் செய்தபடியே, திருஞானசம்பந்தர் பாடிய தேவார பாடலை, வசன வரிகளாக பாடும், நகராட்சியின் ஒப்பந்த துாய்மை பணியாளர் மீனாட்சி:என் கணவர் செல்வம், நாகை நகராட்சியில், பொது சுகாதார உதவியாளராக நிரந்தர பணியில் இருக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டு களாக இந்த பணியை செய்து வருகிறேன். நான்கு பெரிய வீதிகளும் நான் சுத்த செய்ய வேண்டிய பகுதி. அப்போதெல்லாம் கடவுள் மேல் பெரிய அளவில் பக்தி இருந்ததில்லை. ஆனால், 'இந்த கோவிலில் சாமி கும்பிட, தினமும் ஆயிரக் கணக்கில் மக்கள் வருகின்றனர் எனில், இந்த சாமி எத்தனை பேரோட வேண்டுதல்களை தீர்த்து வெச்சிருப்பார்... அவரை நாம் ஏன் அசட்டை செய்றோம்' என தோன்ற, என்னையும் அறியாமல் ஒரு ஈடுபாடு ஏற்பட துவங்கிவிட்டது.அதன்பின், கோவிலின் வரலாற்றையும், பெருமைகளையும் தெரிந்தபின், கோவில் வீதிகளை சுத்தம் செய்யும் வேலையை, இன்னும் அர்ப்பணிப்புடன் செய்ய துவங்கினேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள், 'தினமும் கோவில் வீதியை சுத்தம் செய்தால் மட்டும் போதுமா... இறைவன் மனதில் இடம்பிடிக்க வேண்டாமா' என்றும் தோன்றியது. 'உன் வேலையை மெச்சி சாமி உனக்கு காட்சி தரணும்னு எதிர்பார்க்குறியாக்கும்?' என, கிண்டல் செய்தார் கணவர். 'அவர் காட்சி தர வேண்டாம்; நாம் அவரை அடையலாமே...' என்று கூறி, அதற்கு என்ன செய்யலாம் என, யோசிக்க துவங்கினேன்.'நான் 10ம் வகுப்பு முடித்து 28 ஆண்டுகள் ஆகி விட்டது. இனி புத்தகங்கள் வாங்கி மனப்பாடம் செய்ய முடியுமா' என, தயக்கம் ஏற்பட்டது; கூடவே, கொடுத்த வேலையை பார்க்காமல், கோவிலுக்குள் சென்று உட்கார்ந்து பாடினால், வீட்டுக்கு அனுப்பிடுவாங்களே என, தடுமாறினேன். அதன்பின் தான், வேலை பார்த்தபடியே தேவாரப் பாடல்களை பாடலாம் என, முடிவெடுத்தேன். அதனால், வேலைகளை முடித்து விட்டு, இரவு நேரத்தில், திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங்களை படித்து, மனப்பாடம் செய்து, வேலை பார்க்கும் போதெல்லாம் பாடத் துவங்கினேன். - துவக்கத்தில், நான் வாய்விட்டு பாடியபடியே தெருவை சுத்தம் செய்வதை யாராவது பார்த்தால், சங்கோஜமாக இருக்கும்; உடனே நிறுத்தி விடுவேன்.ஆனால், தற்போதோ, நான் வாயை மூடிட்டு வேலை செய்வதை பார்த்தால், 'எதுவும் பாட்டு பாடலையா?' என, பொதுமக்கள் கேட்டு செல்கின்றனர். திருஞான சம்பந்தர் பதிகங்களை சொல்ல துவங்கினாலும், அதை எந்த கோவிலில் பாட வேண்டும் என எனக்கு தெரியாது. இப்போதெல்லாம், என்னால் ஒரு நாள் கூட பாடாமல் இருக்க முடிவதில்லை. தொடர்புக்கு: 9488918773.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ