நவீன தொழில்நுட்பமான 'ஸ்டீம்' முறையில், பதநீரில் சர்க்கரை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும், துாத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன்: நெல்லை மாவட்டம், வள்ளியூர் பக்கத்தில் உள்ள நம்பியான்விளை கிராமம் தான் என் பூர்வீகம். பி.இ., முடித்து, ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன்.ஒரு முறை, எங்கள் குலதெய்வ கோவிலுக்கு பக்கத்தில் உள்ள தோட்டம் ஒன்றில், பனை மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தனர்.'பனை மரங்களை ஏன் வெட்டுறீங்க? இந்த மரங்களால் எவ்வளவு நன்மைகள் நடக்குதுன்னு தெரியுமா' என, தோட்ட முதலாளியிடம் கேட்டேன்.அதற்கு அவர், 'இங்குள்ள பனை மரங்களில் இருந்து கீழே விழும் பனம் பழத்தைச் சாப்பிட நிறைய பன்றிகள் வருகின்றன. அதனால் கூடுதல் பாதிப்புகள் ஏற்படுகின்றன; கட்டுப்படுத்தவே பனை மரங்களை வெட்டிட்டு இருக்கேன்.நீங்கள் வேண்டுமானால் பதநீர் இறக்கிக்கோங்க; எனக்கு பணம் கூட தர வேண்டாம். பனம் பழம் கீழே விழக்கூடாது என்ற உத்தரவாதம் இருந்தால், மீதமுள்ள மரங்களை வெட்டாமல் இருக்கிறேன்' என்றார்.இது, என்னை யோசிக்க வைத்தது. ஐ.டி., கம்பெனியில் வேலைப்பளு அதிகம் இருந்ததால், அந்த வேலையை விட்டு விட்டு, பதநீர் இறக்கி, கருப்பட்டி தயாரித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தேன். கீழே விழும் பனம் பழ விதைகளை சேகரித்து நட்டு, பனங்கிழங்கு உற்பத்தி செய்து, அதையும் விற்பனை செய்தேன்.அந்த நேரத்தில் தான், வேளாண்மை தொழில் முனைவோர் மையத்தில் நடைபெற்ற ஸ்டீம் முறையில் பனை சர்க்கரை தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்றேன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால், ஸ்டீம் முறையில் பனை சர்க்கரை தயார் செய்து, விற்பனை செய்து வருகிறேன்.நான் விற்பனை செய்யக்கூடிய பனை சர்க்கரையை, காபி மற்றும் பாலில் கலந்தால் உடனே கரைந்து விடும். இதனால் டீக்கடைகள், உணவகங்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் பனை சர்க்கரையை விரும்பி வாங்குகின்றனர்.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பதநீர் கிடைக்கும். கடந்தாண்டு பனை சீசனில் 3,000 கிலோ உற்பத்தி செய்தேன். கிலோ 600 என்று விற்பனை செய்ததன் வாயிலாக, 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில் அனைத்து செலவுகளும் போக, லாபம் 4 லட்சம் ரூபாய்.இந்த ஸ்டீம் முறையில் உற்பத்தியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன.தற்போது ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம். அதனால், செலவு அதிகம். உற்பத்தியை அதிகப்படுத்தினால் செலவு குறையும். இது ஒருபக்கமிருந்தாலும், ஐந்து மாதத்தில் 4 லட்சம் ரூபாய் லாபம் என்பது நிறைவான தொகையே!தொடர்புக்கு: 78717 47765.