உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / விதியையும் தோற்கடித்து கண்ணியமாக வாழலாம்!

விதியையும் தோற்கடித்து கண்ணியமாக வாழலாம்!

'நான் கற்றது' எனும், 'யு டியூப்' சேனலை நடத்தியபடியே, தினமும், 100 பேருக்கு மதிய உணவு வழங்கி வரும், கோவையை சேர்ந்த விக்னேஷ்வரி:பிறந்தது பட்டுக்கோட்டையில்... என் இரண்டரை வயதில் எங்கம்மா தவறிட்டாங்க. சொந்தக்காரங்க வீடுகளில் வளர்ந்தேன். 15 வயதில் திருமணம்; 19 வயதிற்குள் இரண்டு மகள்களுக்கு தாயானேன். திருமண வாழ்க்கையில் நிறைய வேதனைகள். மகள்களை ஹாஸ்டலில் சேர்த்தேன். சொந்தபந்தம் யாருமே வேண்டாம்னு, பிழைப்புக்காக, 2010-ல் கோவைக்கு வந்தேன்.ஒரு மெஸ்சில் சில நாட்கள் பாத்திரம் கழுவினேன். சம்பளம் கேட்டதுக்கு, 'மூணு வேளையும் நீ சாப்பிட்டதுக்கு சரியா போச்சு'ன்னார் மெஸ் ஓனர். அழுகையுடன், அந்த வேலையிலிருந்து வந்துட்டேன். திக்குதிசை தெரியாமல் தவித்தேன். பிளாட்பார்மில் கடை போட்டிருந்த ஓர் அம்மா, அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதித்தார்.அதேநேரம், தினமும் 20 பேருக்கு மதியச் சாப்பாடு செய்து கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடைப்பட்ட நேரத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் பயிற்சியும் கத்துக்கிட்டேன். யாசகம் கேட்காதது மட்டும் தான் பாக்கி. வீட்டில் மெழுகுவத்தி, அப்பளம், வற்றல் தயாரிப்போம். படிப்பு நேரம் போக, அதை விற்பனை செய்வது என, என் பொண்ணுங்களும் குடும்ப பாரத்தை சுமந்தனர்.- ஹோட்டலும் துவங்கினேன்; அதுவும் சரியாக போகலை. யு டியூப் சேனல் துவங்கி, சமையல் வீடியோக்களை பதிவிட்டேன். கடந்தாண்டு துவக்கத்தில், நெய் தயாரிக்கிற வீடியோ ஒன்று, 'ஹிட்' அடித்ததுடன், 'எங்களுக்கும் நெய் வேணும்'னு பலரும் கேட்டாங்க. அதன்பின் தான் சேனல் வளர துவங்கியது. என் சேனலுக்கு, 7 லட்சம், 'சப்ஸ்கிரைபர்கள்' இருக்கின்றனர்; அதன் வாயிலாக பிசினஸை வளர்த்து, அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் சமைத்து கொடுக்கிறேன்.தவிர, சமையலுக்கான மசாலா வகைகள், நெய், சைவம் மற்றும் அசைவ ஊறுகாய் வகைகள், தொக்கு வகைகள் உள்ளிட்ட பல விதமான உணவுகளையும் விற்பனை செய்கிறேன். உள்ளூர் மட்டுமன்றி, இந்தியா முழுக்கவும், வெளிநாடுகளுக்கும் என் தயாரிப்புகள் விற்பனையாகின்றன. தினமும், 100 பேருக்கு மதிய உணவு வழங்கி வருகிறேன். சிறு வயதில், ஒரு வேளை சாப்பாட்டுக்காக ரொம்ப அசிங்கப்பட்டிருக்கேன். கெட்டுப்போன சாப்பாட்டை எனக்கு கொடுத்து கொடுமைப்படுத்தினாங்க. பசியும், பணத்தேவையும் இல்லைன்னா, இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்காது என்பதால், என்னால் முடிந்த வரை சிலருடைய பசியையாவது போக்கலாம் என்று தான், இந்த புண்ணிய காரியத்தை பல ஆண்டு களாக செய்து வருகிறேன். யார் என்ன நினைத்தால் என்ன என்று, துணிந்து போராடவும், உழைக்கவும் தயாராக இருந்தால், விதியையும் தோற்கடித்து, கண்ணியமாக வாழலாம்.தொடர்புக்கு:63825 51776


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை