விவசாயத்திற்கு தேவையான ஐந்து வகையான கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வரும், கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி தீரஜ் ராமகிருஷ்ணா:விவசாயம் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம். 2.75 ஏக்கர் நிலமும், ஆறு மாடுகளும் இருக்கு. பி.இ., புரொடக் ஷன் இன்ஜினியரிங் படித்து விட்டு, பால் பண்ணை துவங்கினேன்.இயந்திர தொழில்நுட்பங்களில் இயல்பாகவே அதிக ஈடுபாடு இருந்ததால், சொந்த முயற்சியில், மாடுகளுக்கு மடிநோய் கண்டறியும் கருவியுடன் கூடிய பால் கறக்கும் இயந்திரத்தை உருவாக்கி, என் பண்ணைக்கு பயன்படுத்தினேன்.தேசிய அளவில் சிறந்த மாட்டுப் பண்ணையாக, என் பண்ணையை மத்திய அரசு தேர்ந்தெடுத்து, 2018ல், உலகப் பால் தினம் அன்று புதுடில்லியில் நடந்த விழாவில் எனக்கு தேசிய கோபால் ரத்னா விருது வழங்கியது.நான் உருவாக்கி பயன்படுத்திய பால் கறக்கும் இயந்திரம், நல்ல முறையில் பலன் கொடுத்ததை பார்த்து சுறறுவட்டார விவசாயிகள் தங்களுக்கும் அதுபோன்ற இயந்திரம் வேண்டும் என கேட்டனர்.அதனால், அந்த இயந்திரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்தேன். அதன்பின், பண்ணைக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்த துவங்கினேன். தேங்காய் மட்டை உரிக்கும் கருவியை நானே வடிவமைத்து உற்பத்தி செய்யத் துவங்கினேன். ஒரு மணி நேரத்தில், 600 தேங்காய்கள் உரிக்கலாம். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தென்னந்தோப்புகள் அதிகம். 10 ஏக்கருக்கு மேல தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள், அந்தக் கருவியை விரும்பி வாங்குகின்றனர். தேங்காய் உடைக்கும் கருவியும் விற்பனை செய்கிறேன். ஒரு மணி நேரத்தில், 1,800 தேங்காய்களை நேர்த்தியாக உடைக்கலாம். பசுந்தீவனம் நறுக்கும் கருவிகளும் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களில் மட்டும் 500 கருவிகள் வரை விற்பனை செய்து உள்ளேன்.ஏற்கனவே சந்தைகளில் அதிக விலையில் கிடைக்க கூடிய தீவனம் நறுக்கும் கருவிகளில், பராமரிப்பு செலவுகள் அதிகம். காரணம், அதில் உதிரிபாகங்கள் அதிகம். நான் வடிவமைத்துள்ள கருவிகளுக்கு பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவு. இந்தக் கருவிகளில் கொடுத்திருக்கிற பிளேடை விவசாயிகளே எளிதாக கழற்றி, கூர்தீட்டி, மறுபடியும் மாட்டிக்கலாம்.இந்த கருவிகளில் சக்கரம் கொடுத்திருப்பதால், மிகவும் எளிதாக எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம். இன்னும் குறைவான விலையில் நிறைய பண்ணை கருவிகளை உருவாக்க வேண்டும் என்பது தான் என் அடுத்தகட்ட இலக்கு.தொடர்புக்கு:81110 10310.