உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / என்னை வாழ வைக்கும் வாழை!

என்னை வாழ வைக்கும் வாழை!

இயற்கை விவசாயத்தில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் வாழை சாகுபடி செய்யும், நெல்லை மாவட்டம், வள்ளியூரில் இருந்து, 12 கி.மீ.,யில் உள்ள வில்வவனம்புதுாரை சேர்ந்த முருகேசன்: இது தான் எங்களோட பூர்வீக கிராமம்.நெல், வாழை, பருத்தி இந்த மூன்றும் தான் எங்கள் ஊர் விவசாயிகள் சாகுபடி செய்யக்கூடிய முதன்மையான பயிர்கள். நான், 'டிப்ளமோ எலக்டரானிக்ஸ்' படிச்சுட்டு, அரசு பணியில் சேர முயற்சி செய்தேன். வேலை கிடைக்கும் வரை அப்பாவுக்கு உதவியாக, விவசாயத்தை கவனிக்க ஆரம்பித்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில், தீயணைப்பு வீரர் பணி கிடைத்தது. விடுமுறை நாட்களில் மட்டும் பண்ணைக்கு வந்து விவசாய பணிகள் மேற்கொள்வது வழக்கம்.அப்பா உடல்நலக்குறைவால் இறந்து விடவே, சில ஆண்டுகள் மன உளைச்சல் காரணமாக, நிலத்தை தரிசாகவே போட்டு வச்சிட்டேன். கொரோனா சமயத்தில் தான் இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறு தானியங்கள் குறித்து, சமூக வலைதளங்களில் அதிகமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதனால், இயற்கை விவசாயம் குறித்த தேடல்களில் இறங்கினேன். அதன் பலன்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன். சோதனை முயற்சியாக, 2020ல் என்னோட, 4 ஏக்கரில், 1 ஏக்கரில் மட்டும், நாடன் ரக வாழையை இயற்கை விவசாயம் வாயிலாக சாகுபடி செய்தேன்.முதல் ஆண்டு மட்டும் சற்று குறைவான மகசூல் கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நல்ல திறட்சியான குலைகள் கிடைத்தன. அதனால் இயற்கை விவசாய பரப்பை விரிவுபடுத்தி, பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் காய்கறிகள் பயிர் செய்ய ஆரம்பித்தேன்.துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வியாபாரி ஒருவரிடம், ஒப்பந்த அடிப்படையில் வாழைக்குலைகளை விற்பனை செய்கிறேன். அறுவடைக்கு தயாரான குலைகளை அவரே அறுவடை செய்து எடுத்துச் சென்று விடுவார். ஒரு குலைக்கு, 250 ரூபாய்... சந்தைகளில் வாழைக்குலைகளில் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம்... எப்போதும் ஒரே விலை தான்; அறுவடைக்கூலி, போக்குவரத்து செலவு எதுவும் தர வேண்டியதில்லை.கடந்தாண்டு, 1.25 ஏக்கரில், 1,200 நாடன் ரக வாழை சாகுபடி செய்தேன். அதில், 150 வாழைகள் இழப்பு போக, 1,050 வாழைகள் விற்பனைக்கு ஏற்ற வகையில் முதல் தரமான, திறட்சியான குலைகளை கொடுத்தன. 1,050 குலைகள் விற்பனை வாயிலாக, 2,62,500 ரூபாய் வருமானம் கிடைத்தது. இலைகள் விற்பனை வாயிலாக, 25,000 ரூபாய் கூடுதல் லாபம் கிடைத்தது. இப்படி, மொத்தம், 2,87,500 ரூபாய் வருமானம் கிடைத்தது. எல்லா செலவுகளும் சேர்த்து, 54,500 ரூபாய் போக, மீதம், 2,33,000 ரூபாய் லாபம் கிடைத்தது. இந்த ஆண்டும் அதே அளவுக்கு லாபம் கிடைக்கும்!தொடர்புக்கு: 94455 34549


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்