கடந்த 35 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் ரத்னா: அடிப்படையில் நான் ஒரு எம்.காம்., பட்டதாரி. கூடவே ஐ.சி.டபிள்யு.ஏ., படிப்பையும் முடித்திருக்கிறேன். கார்ப்பரேட், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்த பின் சொந்தமாக ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வந்த நான், தற்போது மருத்துவத் துறை சார்ந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறேன்.நான் பிறந்து, வளர்ந்தது சென்னை என்றாலும், பூர்வீகம் பாலக்காடு என்பதால் வீட்டில் மலையாளம் கலந்த தமிழ் தான் இருக்கும். அதனால் துாய தமிழை என் பள்ளி தான் கற்றுக் கொடுத்தது.தமிழ் பாடங்களில் இடம்பெறும் கதைகளை பள்ளியில் தான் படிப்பேன். ஏற்ற இறக்கங்களுடன் படிப்பது, நன்றாக உள்ளது என அனைவரும் சொல்ல, எனக்குள் தமிழார்வம் அதிகமானது.செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பது சிறுவயது கனவாக இருந்தது. 'நீ படித்து என்னவாகப் போகிறாய்?' என்று கேட்டால், 'செய்தி வாசிக்கப் போகிறேன்' என்று தான் பதில் சொல்வேன்.துார்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்புக்கு ஆள் எடுத்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டதும், அதற்கு விண்ணப்பித்து, ஆடிஷனுக்கு சென்று தேர்வானேன்.என் முதல் செய்தி வாசிப்பு வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாறி விட்டது. பொதுவாக, துார்தர்ஷனில் செய்தி வாசிப்பதற்கு தேர்வானவர்களுக்கு செய்தி வாசிப்பு குறித்த பயிற்சி கொடுப்பது வழக்கம்.செய்தி வாசிப்பாளர்கள் எப்படி படிக்கின்றனர் என்பதை பயிற்சியில் இருப்போர் கவனிக்க வேண்டும். அப்படித்தான் ஒருமுறை செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி நேரலை செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென இருமல் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.அவரால் தொடர்ந்து வாசிக்க இயலவில்லை. இந்நிலையில், செய்தி அரங்கில் இருந்தோர் திடீரென கை ஜாடையில் செய்தி அறிக்கையை தொடர்ந்து படிக்குமாறு எனக்கு சமிக்ஞை செய்தனர். நானும் பதற்றத்தை வெளிக் காட்டாமல், உடனே மீதமிருந்த செய்திகளை படித்து முடித்தேன். நான் செய்தியை வாசித்து முடித்த பின், 'நீங்கள் இந்த இக்கட்டான சூழலை மிக திறமையாக கையாண்டீர்கள்' என, ஷோபனா ரவி மனம் திறந்து பாராட்டியது ஊக்கமளித்தது. நடுத்தர வயது நபர் ஒருவரை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். அவர், 'என் அப்பாவுக்கு 75 வயதாகிறது. அவருக்கு பிடித்த செய்தி வாசிப்பாளர் நீங்கள் தான். 'எனக்கும், உங்கள் செய்தி வாசிப்பு மிகவும் பிடிக்கும். என், 19 வயது மகனுக்கும் உங்கள் தமிழ் உச்சரிப்பு பிடித்திருக்கிறது' என்று கூறினார்.இப்படி மூன்று தலைமுறை மனிதர்களுக்கும் என் தமிழ் பிடித்திருப்பதை, எனக்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாக பார்க்கிறேன்.