'காபி குடில்' என்ற நிறுவனத்தின் விற்பனை குறித்து கூறும், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜெயராமன்:நான், வெற்றிச்செல்வன், குருநாதன் ஆகியோர் பால்ய கால நண்பர்கள். பிசினஸ் பற்றி தான் நாங்கள் அடிக்கடி பேசுவோம். வெவ்வேறு கல்லுாரிகளில் நாங்கள் இன்ஜினியரிங் படித்தோம். அவரவர் வேலைகளில் பரபரப்பாக இருந்தாலும், பிசினஸ் ஆர்வமும், அதற்கான வாராந்திர சந்திப்பும் தடைபடாமல் பார்த்துக் கொண்டோம். அதிக நேரம் வேலை செய்வோர், தங்கள் களைப்பை போக்கி கொள்ள, டீ, காபியை அதிகம் விரும்புவர்; இதையே எங்களுக்கான களமாக தேர்வு செய்தோம்.காபி, டீ தயாரிப்பதில் நிறைய சூட்சுமங்கள் உள்ளன. அதில் இருந்து, எங்கள் தயாரிப்பு தனித்து இருப்பதை உறுதி செய்தோம். எல்லாம் சரி... அடுத்து, வியாபாரத்திற்கு ஏற்ற இடத்தில் கடையை ஆரம்பிக்கணுமே! முதல் கட்டமாக காலேஜ், ஐ.டி., அலுவலகங்களில், 'அவுட்லெட்' துவங்க நினைத்தோம்.துவக்கத்தில், 7 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிலை துவங்கி, சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில், சொந்தமாக எட்டு கடைகளை நடத்தி வருகிறோம். தவிர, 'பிரான்சைஸ்' முறையில் ஐந்து கடைகளை நடத்துகிறோம். இப்போது ஆண்டுக்கு, 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறோம். முதலீடு செய்ய முன்வருவோருக்கு தொழில் பற்றிய விஷயங்களை சொல்லி கொடுப்பதுடன், சிக்கல் வந்தால் அதை சரி செய்யவும் உதவுவோம். காபிக் கொட்டை களை வாங்கி, தேவைக்கேற்ப அந்தந்த தினத்தில் நாங்களே அரைத்து பயன்படுத்துறோம்.டீத்துாள் கொள்முதல் செய்து, அதில் தரத்தை அதிகப்படுத்த மதிப்பு கூட்டல் செய்வோம். டீ, காபி தவிர, பனங்கற்கண்டு பால், சுக்குப் பால், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனின்னு பலவித உணவுகளையும் ஒரே தரத்தில் எல்லா கடைகளிலும் விற்பனை செய்கிறோம்.'இது என் கடை. என்னால எந்த வேலையும் பாதிக்கப்படக் கூடாது' என்ற எண்ணம் ஒவ்வொரு பணியாளருக்கும் இருந்தால், எந்த ஒரு நிறுவனமும் சிக்கலின்றி வளரும்.அந்தப் பொறுப்புணர்வை எங்க பணியாளர்களுக்கு தொடர்ந்து புரிய வைக்கிறோம்.புதிது புதிதாக எத்தனை கடைகள் துவங்கப்பட்டாலும், அதில் தனித்துவமான மார்க்கெட் தேவையை கண்டுபிடித்து சரியான தீர்வு கொடுக்கிற நிறுவனங்களுக்கு வரவேற்பு நிச்சயமாக கிடைக்கும். அந்த வகையில், புத்துணர்வு தரும் உணவுப் பொருட்களுக்கான பிசினஸ் இன்னும் வேகமாக விரிவடையும்.தொடர்புக்கு: 87789 71520