''கிப்ட் எதுவும் வேண்டாம்... அரிசியா எடுத்துண்டு வாங்கோன்னு சொல்றாங்க ஓய்...'' என்றபடியே வந்தார், குப்பண்ணா.''அட, அரிசியை யாருவே லஞ்சமா வாங்குதா...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''முழுசா கேளும்... தமிழக மகிளா காங்., புதிய தலைவரா ஹசீனாவை நியமிச்சிருக்கால்லியோ... இவங்க மாவட்ட வாரியா, மகளிர் காங்கிரசை வலுப்படுத்த பல திட்டங்களை போட்டிருக்காங்க ஓய்...''சென்னையில், சமீபத்துல இவங்க நடத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துல, 'மக்கள் கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து அதிக போராட்டங்களை நாம நடத்தணும்... காங்., கூட்டங்களில் பெண் நிர்வாகிகள் கூச்சமின்றி, தைரியமா பேசும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்திக்கணும்'னு உத்தரவு போட்டிருக்காங்க ஓய்...''அதோட, 'மகளிர் காங்., நிர்வாகிகள் என்னை பார்க்க வர்றச்சே சேலைகள், பரிசு பொருட்கள் வாங்கிட்டு வராதேள்... அப்படி எனக்கு ஏதாவது கொடுக்க விரும்பினா, தலா, 5 கிலோ அரிசி பை வாங்கிண்டு வாங்கோ... அதை ஆபீஸ்ல சேர்த்து வச்சு, மாசம் ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு தரலாம்'னு உத்தரவு போட்டிருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சிமென்ட் பூச்சு எல்லாம் உதிருதுங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய தனித்தனி நிறுவனங்களா செயல்படுதுங்க... வாரியத்தின் தலைமை அலுவலகம், சென்னை, அண்ணா சாலையில் இருக்குதுங்க... ''இந்த வளாகத்துல, மின் தொடரமைப்பு கழகத்திற்கு, 56 கோடி ரூபாய் செலவுல, ஆறு தளங்களுடன் தனி அலுவலகம் கட்டுனாங்க... இந்த கட்டடத்தை, 2021ல் தான் திறந்து வச்சாங்க...''கட்டி மூணு வருஷம் கூட முடியாத சூழல்ல, பல இடங்கள்ல விரிசல் விட்டிருக்குதுங்க... படிக்கட்டு, கழிப்பறைகள்ல டைல்ஸ்கள் எல்லாம் பெயர்ந்து, சிமென்ட் பூச்சு உதிருது... பாவம், ஊழியர்கள்... உயிரை கையில பிடிச்சுட்டு வேலை பார்க்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''விடுமுறை நாட்களிலும், வேலை பார்க்க சொல்லுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.''விளக்கமா சொல்லுங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''சென்னையை ஒட்டியுள்ள, பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டத்துல, அறநிலைய துறையின் இணை ஆணையர் அலுவலகம் செயல்படுது... இங்கன இருக்கிற ஒரு அதிகாரி, ஊழியர்களை பாடா படுத்துதாரு வே...''வாரத்துக்கு மூணு நாள், 'ஆன்லைன் மீட்டிங்' நடத்துதாரு... ஞாயிறு மாதிரியான விடுமுறை நாட்களிலும், 'பல்வேறு தகவல்கள், விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் பண்ணுங்க... அது சம்பந்தமான தகவல்களை வாட்ஸாப்ல அனுப்புங்க'ன்னு ஊழியர்களை விரட்டுதாரு... யாராவது செய்யாம விட்டுட்டா, 'ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்'னு மிரட்டுதாரு வே...''இணை ஆணையரின் அதிகாரத்தை ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்த மாதிரி, இந்த அதிகாரி செயல்படுதாரு... அறநிலைய துறை ஊழியர்கள் எல்லாம் அழாத குறையா புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி'ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா...' என டீ கடை ரேடியோவில் ஒலித்த பாடலை, சில நிமிடங்கள் ரசித்தபடியே, பெரியவர்கள் கிளம்பினர்.