''ராஜினாமா மிரட்டலால தான், பதவி தந்திருக்காங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியா இருந்த சுதா ராமகிருஷ்ணன், மயிலாடுதுறை தொகுதியில போட்டியிட்டதால, அவங்க இடத்துக்கு புதிய தலைவியை நியமிக்க வேண்டிய சூழல் வந்துச்சு பா...''இதுக்கு இடையில, காங்கிரசுக்கு தி.மு.க., ஒதுக்கிய 10 தொகுதிகள்ல ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்ல... இதனால, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலரா இருந்த ஹசீனா சையத், மூத்த நிர்வாகிகளான இதயத்துல்லா, குலாம் முகமது, முகமது இஸ்மாயில் ஆகியோர், தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செஞ்சிருக்காங்க பா...''அவங்களிடம் சமாதானம் பேசிய மேலிட தலைவர்கள், 'ராஜினாமா எல்லாம் வேண்டாம்... சட்டசபை தேர்தல்ல உரிய பிரதிநிதித்துவம் தருவோம்'னு உறுதி தந்தாங்க... அதிருப்தியை சரிக்கட்டுற விதமா தான், மகளிர் காங்., தலைவர் பதவியை ஹசீனா சையத்துக்கு குடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''வருஷம் ஒண்ணாகியும், கோடிக்கணக்கான பணத்தை மீட்காம அலட்சியமா இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருநெல்வேலி டவுனில் வசிக்கற மார்வாடி நகைக்கடை அதிபர் சுஷாந்த் குமார், கேரள மாநிலம், நெய்யாற்றின் கரையில் உள்ள தன் உறவினர் நகை கடையில நகைகள் வாங்குவாரு... இதுக்காக, அடிக்கடி பணம் எடுத்துட்டு கேரளா போறது வழக்கம் ஓய்...''இதை நோட்டமிட்ட கேரள கொள்ளை கும்பல் ஒண்ணு, போன வருஷம் மே 30ம் தேதி, கேரளாவுக்கு கார்ல போயிட்டு இருந்த சுஷாந்தை, மூன்றடைப்பு பக்கத்துல மடக்கி, அவரை தாக்கி, 1.50 கோடியை கொள்ளை அடிச்சுட்டு போயிடுத்து... இது சம்பந்தமா விசாரணை நடத்தி, அந்த கும்பல்ல ஆறு பேரை நெல்லை போலீசார் கைது பண்ணிட்டா ஓய்...''ஆனா, அவாளிடம் இருந்து இன்னும் 10 லட்சம் ரூபாயை கூட மீட்கல... நெல்லையில ஜாங்கிட், கரன்சின்கா, கண்ணப்பன், அஸ்ரா கார்க் மாதிரி நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருந்தப்ப, இந்த மாதிரி சம்பவங்கள்ல மீட்கப்படும் நகை, பணம் குறித்து பத்திரிகைகளுக்கு தெளிவான தகவல் தருவா... ஆனா, இந்த கொள்ளை சம்பவத்துல போலீசார் எல்லாத்தையும் பூசி மெழுகறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வாங்குன பணத்துல பங்கு தராம அமுக்கிட்டாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''லோக்சபா தேர்தல்ல, கோவை தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமாருக்கு ஆதரவா தேர்தல் பணிகள் செய்ய, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு தி.மு.க., தரப்புல இருந்து பல லட்சங்களை குடுத்திருக்காவ... அதை வாங்கிய நிர்வாகிகள், சக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு செலவு செய்யாம, மொத்தத்தையும் அமுக்கிட்டாவ வே...''கட்சி தலைவர் கமல், 'யார்கிட்டயும் பணம் வாங்கக் கூடாது'ன்னு உத்தரவு போட்டிருந்தாரு... அதை எல்லாம் கண்டுக்காத மாவட்ட நிர்வாகிகள் பணத்தை வாங்கிட்டு, அந்த தகவல் கமலுக்கு போயிட கூடாதுங்கிறதுக்காக, சில மாநில நிர்வாகிகளுக்கும் ஒரு தொகையை குடுத்து, 'கரெக்ட்' பண்ணிட்டாவ... இதனால, வெறுப்புல இருக்கிற கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர், வேற கட்சிக்கு தாவுற முடிவுக்கு வந்துட்டாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''தி.மு.க.,வுடன் கூட்டணி வச்சுட்டால்லியோ... சகவாச தோஷம் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.