''எந்த விதிமுறையும் இல்லாம, மாணவர் சேர்க்கை நடக்கறது ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''எந்த கல்லுாரியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''நடப்பு கல்வியாண்டில், அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கு ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்னு அறிவிச்சு, அதுக்காக ஏழு பேர் கொண்ட கமிட்டியையும் டிசம்பர் மாசமே அமைச்சா ஓய்...''ஆனா, எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடாம, நடப்பாண்டு கல்லுாரிகள்ல மாணவர் சேர்க்கை நடக்கறது... இதுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர்கல்வி துறை வெளியிடல ஓய்...''விதிமுறைப்படி சேர்க்கை நடத்த, கல்லுாரி கல்வி இயக்குனரக பொறுப்பாளர்கள் உறுதியா இருந்திருக்கா... ஆனா, துறையின் செயலர் மற்றும் அமைச்சர் மட்டத்துல போதிய ஒத்துழைப்பு கிடைக்கலன்னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''அரசியல்ல விஸ்வாசம் காணாம போயிட்டுன்னு புலம்புதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, அமைச்சர் நேரு தலைமையில் திருச்சியில் நடந்துச்சு... இதுல, எம்.எல்.ஏ.,க்களான லால்குடி - சவுந்தர்ராஜன், மண்ணச்சநல்லுார் - கதிரவன், துறையூர் - ஸ்டாலின் குமார், திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் கலந்துக்கல வே...''இனிகோ இருதயராஜ், எப்பவுமே நேருவை கண்டுக்கிறது இல்ல... ஆனா, வராத மற்ற மூணு பேருமே, நேருவால தான் பதவிக்கு வந்தாவ... ஆனாலும், நேரு பங்கேற்ற விழாவை புறக்கணிச்சுட்டாவ வே...''இதுல, மண்ணச்ச நல்லுார் கதிரவன் ஒரு படி மேல போய், தனியா முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிச்சு, போஸ் குடுத்துட்டு போயிருக்காரு... இதை பார்த்த நேருவின் ஆதரவாளர்கள், 'வளர்த்த கடா மார்புல பாயுது பாருங்க'ன்னு வேதனைப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''முக்கிய பதவிக்கு பழைய ஆட்களே காய் நகர்த்துறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''எந்த ஊரு விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''கோவை மாநகராட்சியில் இருக்கிற எட்டு உதவி கமிஷனர் பணியிடங்கள்ல, இரண்டு இடங்கள் காலியா கிடக்குதுங்க... இதனால, கணக்கு பிரிவு பெண் ஏ.சி.,யிடம், வருவாய் பிரிவு ஏ.சி., பதவியை கூடுதலா குடுத்திருக்காங்க...''அதே மாதிரி, காலியா இருக்கிற தெற்கு மண்டல ஏ.சி., பணியிடத்தை, நிர்வாக பொறியாளர் ஒருத்தரிடம் கூடுதல் பொறுப்பா குடுத்திருக்காங்க... ''அந்த மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளுக்கும் இவரே நிர்வாக பொறியாளராகவும், இவரே ஏ.சி.,யாகவும் இருப்பது, முறைகேட்டுக்கு வழிவகுக்கும்னு புகார்கள் எழுந்திருக்குதுங்க...''இதுக்கு மத்தியில, காலியா இருக்கிற இரண்டு பதவிகளையும் பிடிக்க, ஏற்கனவே கோவையில் பணியாற்றி, வெவ்வேறு ஊருக்கு மாறுதல்ல போயிட்ட ரெண்டு அதிகாரிகள் காய் நகர்த்துறாங்க... ''அ.தி.மு.க., ஆட்சியில கொடி கட்டி பறந்த ரெண்டு பேரும், தேர்தல் விதிகள் வாபஸ் ஆனதும், 'ஸ்பெஷல் ஆர்டர்' வாங்கிட்டு இந்த இடங்கள்ல ஜாயின் பண்ண போறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''செந்தில்குமார், மகேஷ் வரா... பிளாக் காபி போடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.