உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரூ.48 லட்சம் கையாடலில் விலகாத மர்மம்!

ரூ.48 லட்சம் கையாடலில் விலகாத மர்மம்!

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''ஷூட்டிங், மீட்டிங்கால தான், 'பிக்பாஸ்'ல இருந்து விலகிட்டாரு பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''கமல் தகவலாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''ஆமா... மணிரத்னம் இயக்கத்துல கமல்ஹாசன் நடிக்கிற, தக்லைப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்ல சீக்கிரமே துவங்க போகுது... 'பிக்பாஸ்' ஷூட்டிங் வெள்ளி, சனின்னு ரெண்டு நாள் நடக்கும் பா...''ஹைதராபாதுக்கும், சென்னைக்குமா அலைய முடியாது... அதுவும் இல்லாம, பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ், சொந்த படம் எடுக்குறாரு பா... அதுலயும் கமல் நடிக்க இருக்காரு... அடுத்து, கல்கி படத்தின் ரெண்டாம் பாகம் ஷூட்டிங்னு வரிசைகட்டி கால்ஷீட் குடுத்திருக்காரு பா...''இந்த வருஷகடைசியில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க போகுது... இதுல, தி.மு.க., கூட்டணியில தன்கட்சியினருக்கு 5 சதவீதம் இடங்களாவது வாங்கி தரணும்னு கமல் நினைக்கிறாரு பா...''தேர்தல் ஆலோசனைக்காக, இந்த மாத மத்தியில கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்ட இருக்காரு... இப்படி வரிசையா வேலைகள் இருக்கிறதால தான், 'பிக்பாஸ்'ல இருந்து விலகிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''பதவி பறிபோகும் சோகத்துல இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் நிலவாரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளை, சேலம் மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகள் நடக்கறது... இதுல, ஐந்து ஊராட்சி தலைவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவா ஓய்...''இவாளது பதவிக்காலம் வர்ற டிசம்பருடன் முடியறது... மறுபடியும் தலைவர் பதவிக்கு போட்டியிட நினைச்சவா, இந்த இணைப்பு பணியால நொந்து போயிருக்கா... 'இந்த இணைப்பு சம்பந்தமா, ஆளுங்கட்சியின் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்னு யாரும் எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்கலையே'ன்னு புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''திருடிய பணத்தை திருப்பி குடுத்துட்டா, திருடனை மன்னிச்சிடலாமா வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''புதிர் போடாம விஷயத்துக்கு வாரும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகாவில்,முதியோர் உதவி தொகை 48 லட்சம் ரூபாயை, தாலுகா அலுவலக ஒப்பந்த ஊழியர் ஒருத்தர் கையாடல் பண்ணிட்டாரு... கிட்டத்தட்ட மூணு வருஷமா இந்த மோசடி நடந்திருக்கு வே...''இது சம்பந்தமா விசாரணை நடத்த, துணை கலெக்டர் நிலையில அதிகாரிகளை கலெக்டர் ஜெயசீலன் நியமிச்சாரு... ஆனா, இந்த சம்பவத்துல இதுவரை ஊழியர் மேல கிரிமினல் வழக்கே பதிவாகல வே...''கேட்டா, கையாடல் செய்தவர், முழு பணத்தையும் தந்துட்டதா அதிகாரிகள் சொல்லுதாவ... முதல்ல, ஒப்பந்த ஊழியரிடம், தாசில்தாரின், 'யூசர் நேம், பாஸ்வேர்டு' எப்படி போனதுங்கிற கேள்விக்கு விடை இல்ல... இந்த சம்பவத்துல இன்னும் மர்மம் விலகல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 10, 2024 17:10

அன்றைய அமைச்சர்- இன்றைய சிறையிலிருக்கும் மாஜி- நியமங்களுக்கு வாங்கியதை திருப்பித் தந்து விட்டதால் தப்பிக்க நினைத்தார் ஆனால், அன்று அம்மகியார் டான்சி நிலத்தைத் திருப்பிக்கொடுத்து தப்பித்த முன்மாதிரியும் உள்ளதே


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை