உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தேர்தலில் பா.ஜ.,வுக்கு உதவிய மணல் புள்ளிகள்!

தேர்தலில் பா.ஜ.,வுக்கு உதவிய மணல் புள்ளிகள்!

''கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய்க்கு சீருடை எடுத்திருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்துல சமீபத்துல நடந்த கூட்டத்துல, மாதாந்திர செலவினங்களுக்கு ஒப்புதல் வாங்கும் தீர்மானங்களை வாசிச்சாவ... இதுல, 'நாலு உதவியாளர்கள் மற்றும் இரண்டு டிரைவர்கள்னு மொத்தம் ஆறு பேருக்கு தலா மூணு செட் சீருடை கள், பொன்னி கூட்டுறவு சங்கம் மூலம் 87,500 ரூபாய்க்கு வாங்கினோம்... அவற்றை தைக்க, 10,200 ரூபாய் கூலின்னு மொத்தம் 97,700 ரூபாய் செலவுக்கு ஒப்புதல் தரணும்'னு கேட்டிருந்தாவ வே...''கவுன்சிலர்கள் சிலர், 'ஆறு பேரின் சீருடைக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் செலவு செய்தும், அதை பணியாளர்கள் யாரும் போட்டுட்டு வந்த மாதிரி தெரியலையே'ன்னு கேள்வி எழுப்புனாவ... அதுக்கு கமிஷனர் சந்திரமலர், 'வேணும்னா சீருடைகள் கொள்முதல் செய்த ரசீது காண்பிக்கிறோம்'னு சொன்னாங்க வே...''உடனே, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய தலைவர் வருதராஜ், 'எல்லாம் முறையா தான் நடக்குது'ன்னு அதிகாரிகளுக்கு ஆதரவா பேசி பிரச்னையை முடிச்சுட்டாரு... நிஜமாவே சீருடை வழங்குனாங்களான்னு கவுன்சிலர்கள் சந்தேகப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''தப்பு செய்தவங்களை காப்பாத்தி விடுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''ஈரோடு அரசு மருத்துவமனையில், 'ஹவுஸ் கீப்பிங்' பணியில், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்காங்க... இவங்க துாய்மை பணி, வார்டு பராமரிப்பு, பாதுகாப்பு போன்ற பணிகள்ல ஈடுபடுறாங்க...''ஆனா, இவங்களை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் மற்றும் சில டாக்டர்கள், தங்கள் சொந்த பணிகளுக்கு வெளி வேலைகளுக்கு அனுப்புறாங்க... ''அதோட டாக்டர்கள், நர்ஸ்கள் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை தர்றது, ஸ்கேன் மையத்தில் நோயாளிக்கு கருவிகளை பொருத்துறது, டிரிப்ஸ் மாத்துறது, ஓ.பி., சீட்டு வழங்குறது உள்ளிட்ட பணிகள்லயும் ஈடுபடுத்துறாங்க...''கடந்த ஒன்றரை மாசத்துல, இப்பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபடுறது தொடர்பா நாலஞ்சு வீடியோக்கள் வெளியாச்சு... ''ஆனா, அவங்களை வேலை வாங்கிய டாக்டர், நர்ஸ்கள் மீது நடவடிக்கை எடுக்காத இணை இயக்குனர், துாய்மை பணியாளர்களை மட்டும் 'சஸ்பெண்ட்' செய்தும், இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்திருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''முக்கிய புள்ளி உத்தரவுப்படி பா.ஜ.,வுக்கு உதவி பண்ணியிருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திண்டுக்கல் கூட்டுறவு துறையில் இருக்கிற ஒரு அதிகாரி, தமிழக பா.ஜ., முக்கிய பிரமுகருக்கு உறவினராம்... இவரும், அந்த மாவட்ட முன்னாள் முக்கிய அதிகாரியும் சேர்ந்து, பா.ஜ., பிரமுகர் மூலமா, இரண்டு கோட்டை புள்ளிகள் மீதான புகார்ல தொடர் நடவடிக்கை இல்லாம, பைல்களை துாங்க வச்சுட்டா ஓய்...''அதுக்கு பிரதிபலனா, கொங்கு மண்டலத்துல பா.ஜ., போட்டியிட்ட சில தொகுதிகள்ல, சில மணல் புள்ளிகள் நேரடியா களம் இறங்கி, அவங்களுக்கு உதவி செஞ்சிருக்கா... இதை, உளவுத் துறையினரும் மோப்பம் பிடிச்சிட்டா ஓய்...''அவாளிடம் விசாரிச்சப்ப, 'கோட்டை புள்ளி சொல்லி தான் ஒத்தாசைக்கு வந்தோம்'னு உண்மையை போட்டு குடுத்துட்டா... இதை, மேலிடத்துக்கு உளவுத்துறை தெரிவிச்சிட்டாலும், கோட்டை புள்ளி மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிய, பெரிய வர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூலை 08, 2024 19:25

6 பேருக்கு தலா மூணு செட் சீரூடை வாங்கி தைக்க ஒரு லட்ச ரூபாயா..?? ஒரு செட் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகாது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை