இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''போலி முத்திரைகளை பயன்படுத்துறாங்க...'' என பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''சென்னை, செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 100க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகுது... 30க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் இருக்காங்க...''இதுல சிலர், பத்திரப்பதிவு ஆவணங்கள்ல, வக்கீல்கள் சீல், பெயர் முத்திரை மற்றும் கையெழுத்தை போலியா பயன்படுத்துறாங்க... சார் - பதிவாளர்களுக்கு, ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டால் விசாரிக்க உதவியா, அதில் வக்கீல்களின் மொபைல் போன் நம்பர் இருக்கிறது இல்லை...''இதனால, போலியான சி.எம்.டி.ஏ., ஆவணங்கள் மூலம், அப்பாவி மக்களிடம், நீர்நிலை மற்றும் புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளை விற்பனை பண்ணிடுறாங்க... குறிப்பா, பம்மதுகுளம், பொத்துார், நல்லுார், அலமாதி ஊராட்சிகள்ல இந்த முறைகேடுகள் நிறைய நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''வழக்கு பதிவு பண்ணி விசாரணை நடந்தாலும், துறையில எந்த நடவடிக்கையும் எடுக்கலை பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''பெரம்பலுார் மாவட்டம், மலையாளபட்டி ஊராட்சியில், தடுப்பணைகள் கட்டாமலே, கட்டியதா கணக்கு காட்டி, 34 லட்சம் ரூபாயை கையாடல் பண்ணிட்டாங்க... இது பத்தி நாம முன்னாடியே பேசியிருக்கோம் பா...''இது சம்பந்தமா, வேப்பந்தட்டை யூனியன் ஓவர்சியர் மணிவண்ணன், இளநிலை பொறியாளர் நாகராஜன், பி.டி.ஓ., அறிவழகன் மற்றும் சில கான்ட்ராக்டர்கள்னு ஏழு பேர் மேல லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செஞ்சாங்க...''சமீபத்துல, மலையாளபட்டி ஆற்றை பார்வை யிட்டு, தடுப்பணை கட்டலை என்பதை உறுதிப்படுத்திட்டாங்க பா...''அந்த ஊர் வி.ஏ.ஓ.,வும், 'எனக்கு தெரிஞ்சு இந்த கிராமத்துல எந்த தடுப்பணையும் கட்டலை'ன்னு எழுத்துபூர்வமாவே விளக்கம் தந்துட்டாரு... இவ்வளவு நடந்தும், வழக்குல சிக்கியவங்க இன்னும் பணியில நீடிக்கிறாங்க... அவங்க மேல, துறை ரீதியில எந்த நடவடிக்கையும் எடுக்கலை பா...'' என்றார், அன்வர்பாய்.''குண்டர் சட்டத்துல போனவர், ஜெயில்ல சொகுசு வாழ்க்கை வாழறார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பொதுப்பணித் துறை ஓய்வு பெற்ற அதிகாரி ஞான சுந்தரத்தின் மகன் பாலாஜி... ரியல் எஸ்டேட் தொழில்ல முக்கிய புள்ளியா இருந்தார் ஓய்...''தோப்பனாருடன் சேர்ந்து, ஒரே நிலத்தை பலருக்கு விற்ற மோசடி வழக்குல, 2005ம் வருஷம் கைதானார்... 'உள்ள' போயிட்டு வந்ததுல, நில மோசடியில பெரிய கில்லாடியா மாறிண்டார் ஓய்...''பாலாஜி, ஒரு தொழிலதிபரிடம் 2.85 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதுக்கு ஈடா 16 சொத்து ஆவணங்களை குடுத்திருந்தார்... அப்பறமா, அந்த சொத்துக்களுக்கு போலி ஆவணங்கள் தயாரிச்சு, பலருக்கும் வித்துட்டார் ஓய்...''இந்த வழக்குல, பாலாஜியை கைது பண்ணி, புழல் ஜெயில்ல அடைச்சிருக்கா... ஆனா, அங்க ஸ்மார்ட்போன், விதவிதமான சாப்பாடுன்னு ராஜ வாழ்க்கை வாழறார்... ''ஆளுங்கட்சியில இருக்கற பழம்பெரும் கவிஞர் பெயர் கொண்ட ஒருத்தர் தான், பாலாஜிக்கு இந்த சொகுசு ஏற்பாடுகளை பண்ணி குடுத்திருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.