உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கூலிப்படை உதவியுடன் நடந்த நகராட்சி ஏலம்!

கூலிப்படை உதவியுடன் நடந்த நகராட்சி ஏலம்!

''ஆளுங்கட்சியினர் வளர்ச்சிக்கு, அரசு நிதி பயன்படுது பா...'' என்றபடியே, மசாலா டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய தி.மு.க., நிர்வாகியா இருக்கிறவர், ஒன்றிய நிர்வாகத்துல, 'துணை'யான பதவியிலும் இருக்காரு... ரியல் எஸ்டேட் தொழிலும் செய்றாரு பா...''இவர், வாலாஜாபாத் புறநகர் பகுதியில, தன் அப்பா பெயர்ல ஒரு நகரை உருவாக்கி, வீட்டுமனை பிரிவுக்கு அனுமதி வாங்கியிருக்காரு... அந்த இடத்துல, நிறைய வீடுகள் எதுவும் இல்லை பா...''ஆனாலும், அந்த நகருக்கு, வாலாஜாபாத் பேரூராட்சி சார்புல, 26 லட்சம் ரூபாய் செலவுல சிமென்ட் சாலை போடுறதுக்கு, சமீபத்துல பூமி பூஜை போட்டிருக்காரு...''சாலையே இல்லாத பல வார்டுகளில் சாலை போட நிதியில்லைன்னு சொன்ன பேரூராட்சி, இதுக்கு மட்டும் எப்படி நிதி ஒதுக்கிச்சின்னு, கவுன்சிலர்கள் கடுப்புல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''சேகர் இப்படி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''உதயசூரியன் சின்னத்துல நிற்க முடியாதுன்னு மறுக்க போறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.''எந்த கட்சியை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துல மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியிருக்குதே... ஏற்கனவே இந்த சின்னத்துல தான், சட்டசபை தேர்தல்லயும் அந்த கட்சியினர் போட்டியிட்டாங்க...''இப்ப, தி.மு.க., அணியில ரெண்டு சீட்டுக்கு பேரம் பேசிட்டு இருக்காங்க... அவங்க, உதயசூரியன் சின்னத்துல நிற்க சொன்னாலும், 'எங்க கட்சிக்குரிய அதிகாரப்பூர்வமான டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கிட்டதால, அதுலயே நிற்கிறோம்'னு சொல்ல போறாங்களாம்...'' என்றார், அந்தோணிசாமி.''கூலிப்படை உதவியோட, நகராட்சி ஏலம் நடந்த கதையை கேளும் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சிவகங்கை நகராட்சி கட்டுப்பாட்டுல இருக்கற வாரச்சந்தையில, வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கறது, பஸ் ஸ்டாண்ட்ல நுழைவு கட்டண வசூல் உரிமம், டூ -- வீலர் பார்க்கிங் உரிமம் உட்பட 16 இனங்களுக்கான ஏலம், சமீபத்துல நகராட்சி கமிஷனர் தலைமையில நடந்துது ஓய்...''மொத்தம், மூணு வருஷ உரிமம்... 100க்கும் மேற்பட்டவா வந்தா... கட்சி பேதமில்லாம, பலரும், 'சிண்டிகேட்' போட்டா ஓய்...''இவா தரப்புல இருந்து அரிவாள், கத்தி, கம்போட கூலிப்படையை களம் இறக்கிட்டா... இந்த கூலிப்படையினர் நகராட்சி ஆபீசுக்கு வெளியில நின்னுண்டு, ஏலம் எடுக்க வந்த பலரையும் மிரட்டி, விரட்டி அடிச்சா... பாதுகாப்பு போலீசார் வேடிக்கை தான் பார்த்தா... எட்டு இனங்களுக்கு ஏலம் நடந்துது... மீதி எட்டுக்கு, அப்பறமாம்...'' என முடித்தார், குப்பண்ணா.''அதெல்லாம் இல்லயாமுல்லா...'' என, திடீரென ஒரு விஷயத்திற்கு 'லீட்' கொடுத்த அண்ணாச்சியின் முகத்தை, அனைவரும் உற்று நோக்கினர்.தொடர்ந்த அண்ணாச்சி, ''கோவில் பெயரைக் கொண்ட அந்த நகர்ல இருக்கிற பிரபல மில்லை, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வாங்க முயற்சி செய்யிதாருன்னு, சில நாள் முன்ன பேசினோம்லா... அப்படி ஏதும் நடக்கலேன்னு இப்ப தகவல் வருது வே...'' என்றார்.''ஓ... அப்படியாங்க...'' என்றபடியே அந்தோணிசாமி கிளம்பத் தயாராக, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை