உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தந்த பரிசு!

அரசுப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தேன். எங்கள் தமிழாசிரியர், தமிழ்பற்று மிக்கவர். எப்போதும், ஆங்கிலம், வடமொழி சொல் கலக்காமல் துாய தமிழில் பேசுவார்.தமிழ் பாடவேளையில், திருக்குறளை தவறு இல்லாமல் ஒப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒரு குறளுக்கு, ஐந்து ரூபாய் வீதம், பரிசாக தருவார். போட்டி போட்டு, திருக்குறளை ஒப்பித்து, அவர் தரும் பணத்தில், பேனா, நோட்டு, பென்சில் வாங்குவோம்.என் வகுப்பில், நன்றாக படிக்கும் ஏழை மாணவி, அரசு பொதுத் தேர்விற்கு, கட்டணம் செலுத்த, பணம் இல்லாமல் தவித்தாள். அன்று, பணம் செலுத்த கடைசி நாள்; தமிழ் வகுப்பில், 20 குறள்களை மனப்பாடம் செய்து, தவறு இல்லாமல் ஒப்பித்தாள்.தமிழ் ஆசிரியர் அந்த மாணவிக்கு, 100 ரூபாய் பரிசாக வழங்கினார். அதை, தேர்வு கட்டணமாக செலுத்தி விட்டாள். அந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில், அவளே, பள்ளியில், முதல் மதிப்பெண் பெற்றாள். அந்த ஆசிரியர், மாணவ, மாணவியர் உள்ளத்தில் பதிந்தார். இப்போது என் வயது, 45; அந்த ஆசிரியரின் உதவும் உள்ளத்தை, மறக்க முடியவில்லை. மனதில், உயர்ந்த இடத்தில் இருக்கும், அந்த தமிழாசிரியரை வணங்கி மகிழ்கிறேன்!- ஆர்.அபிதா, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !