உள்ளூர் செய்திகள்

பூட்டிய போஸ்ட் பாக்ஸ்!

கடந்த, 1990ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியராக, திருச்செல்வம் என்பவர் பணியாற்றினார்; வெளியூர்காரர். வார இறுதி நாட்களில், குடும்பத்தாருக்கு கடிதம் எழுதுவார். அதை எங்களிடம் தந்து, தபால்பெட்டியில் போட சொல்வார். எங்கள் வீட்டு அருகே இருந்த, தபால்பெட்டியில், வழக்கமாக நான் போடுவேன்.உடல்நலக் குறைவால் பள்ளிக்கு செல்லாத நாளன்று, என் வகுப்பு மாணவனிடம் கடிதத்தை கொடுத்து, 'போஸ்ட்' செய்ய சொல்லியிருக்கிறார். அவன், அதை தபால்பெட்டியில் போடவில்லை. மறுநாள், திரும்ப எடுத்து வந்து, கொடுத்தான். 'ஏன்டா, போஸ்ட் செய்யலயா...' என, தலைமை ஆசிரியர் கேட்டார். அவனோ, 'போஸ்ட் செய்யத்தான் போனேன்; ஆனா... அதுக்குள்ள, போஸ்ட் மேன் பெட்டியில் இருந்த கடிதங்களை எல்லாம் அள்ளிட்டு, போஸ்ட் பாக்சை பூட்டிட்டார்...' என்றானே பார்க்கலாம்! வகுப்பறையில் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம். பின், அவனிடம், போஸ்ட்பாக்ஸ் பற்றியும், அது இயங்கும் விதம் பற்றியும் தலைமை ஆசிரியர் விவரித்து சொன்னார். இந்த சம்பவம் நடந்து, 28 ஆண்டுகளாகிவிட்டன. இந்த, 'பேஸ்புக்', 'வாட்ஸ்ஆப்' யுகத்திலும், இது மறக்க முடியாததாகி விட்டது!- ப.காளிதாசன், புதுக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !